தேசிய கீதத்தை அவமதித்த நிதிஷ் குமார்; சர்ச்சையான வீடியோ - தேஜஸ்வி கடும் தாக்கு!


பட்னா: பொதுநிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிஹார் முதல்வர் நிதிஷ்குமார், தேசிய கீதம் இசைக்கப்படும்போது சைகை காட்டி பேசிக்கொண்டிருந்த வீடியோ விமர்சனத்தை எழுப்பியுள்ளது.

பாட்னாவின் பாடலிபுத்ரா விளையாட்டு வளாகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்கும்போது பீகார் முதல்வர் நிதிஷ் குமார் சிரித்து கொண்டு கைகளால் சைகை காட்டி பேசிக்கொண்டிருந்த வீடியோ வைரலாகியுள்ளது.

பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள அந்த வீடியோவில், ‘ஜன கண மன…’ என்ற தேசிய கீதம் ஒலிக்கும்போது, முதல்வர் நிதிஷ்குமார் தன் அருகில் நிற்கும் முதலமைச்சரின் முதன்மைச் செயலாளருமான தீபக் குமாருடன் சிரித்துக் கொண்டு பேசுவது கேமராவில் பதிவாகியுள்ளது. மேடையில் இருந்த அனைவரும் அமைதியாக தேசியகீதம் பாடும்போது, நிதிஷ் குமார் சைகைகளை காட்டி புன்னகைத்து கைகளை கூப்பி வணக்கம் வைத்தபடி இருந்தார்.

நிதிஷ் குமாரின் இந்தச் செயலால், அவர் தேசிய கீதத்தை மதிக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்த விவகாரம் குறித்து பிஹார் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், “ முதலமைச்சர் அவர்களே, குறைந்தபட்சம் தேசிய கீதத்தையாவது அவமதிக்காதீர்கள். நீங்கள் ஒவ்வொரு நாளும் இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்களை அவமதிக்கிறீர்கள்.

சில நேரங்களில் மகாத்மா காந்தியின் தியாக நாளில் கைதட்டி, அவரது தியாகத்தை கேலி செய்கிறார்கள், சில சமயங்களில் தேசிய கீதத்தில் கைதட்டுகிறார்கள்.

நீங்கள் ஒரு பெரிய மாநிலத்தின் முதலமைச்சர் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். நீங்கள் ஒரு சில வினாடிகள் கூட மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிலையாக இல்லை. மேலும் நீங்கள் இதுபோல மயக்க நிலையில் இருப்பது மாநிலத்துக்கு மிகுந்த கவலையைத் தருகிறது. பிஹாரை இப்படி மீண்டும் மீண்டும் அவமதிக்காதீர்கள்” என்று கூறியுள்ளார்

x