வளரும் இந்தியாவின் உத்வேகத்தை பிரதிபலித்தது மகா கும்பமேளா: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமிதம்


வளரும் இந்தியாவின் உத்வேகத்தை, சமீபத்தில் நடைபெற்ற மகா கும்பமேளா பிரதிபலித்தது என நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி பெருமையுடன் கூறினார்.

மக்களவையில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது: உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 45 நாட்கள் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 66 கோடிக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்றே்றனர். இது நாட்டின் புதிய உத்வேகத்தை பிரதிபலித்து ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது நாம் மிகப் பெரிய இலக்குகளை அடைய உதவும். ஒரு சமூகம் தனது பாரம்பரியம் பற்றி பெருமை கொள்ளும்போது, நாம் புண்ணியமான காட்சிகளை காண்கிறோம். இந்த விழா நமது சகோதாரத்துவம் மற்றும் தன்னம்பிக்கையை வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இந்தியா மிகப் பெரிய இலக்குகளை அடைய முடியும். பாரம்பரியம், நம்பிக்கை ஆகியவற்றுடன் நாம் இணைவது, நாட்டுக்கு மிகப் பெரிய மூலதனம்.

நதிகளில் நடைபெறும் விழாக்களுக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போதுதான், தற்போதைய தலைமுறை, நீரின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை சுத்தமாக பாதுகாக்கும். மகா கும்பமேளா உத்வேகம் நமக்கு தொடர்ந்து பல பயன்களை அளிக்கும்.

மகா கும்பமேளாவில் இருந்து நமக்கு பல நண்மைகள் ஏற்பட்டுள்ளன. இங்கு ஏற்பட்ட ஒற்றுமை, மிகப் பெரிய சாதனை. நாடு முழுவதும் உள்ள மக்களை இந்த விழா ஒன்றிணைத்தது. பல மாநிலங்களைச் சேர்ந்த மக்கள், பிரயாக்ராஜின் திரிவேணி சங்கமத்தில் ஒன்றிணைந்தனர். இது தேசிய உணர்வை வலுப்படுத்தி, நம் நாட்டை பலப்படுத்தியுள்ளது. பல மொழிகளை பேசும் மக்கள், சங்கமம் பகுதியில் ஹர் ஹர் கங்கா என கோஷமிட்ட போது, ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற உணர்வு வலுவடைந்தது.

மகா கும்பமேளாவில் அனைவரும் சமம். நமக்குள் இருந்த ஒற்றுமையை இந்த விழா எடுத்துக் காட்டியது. நமது ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றவர்களுக்கு இந்த விழா ஒரு பாடம். இந்த ஒற்றுமை உணர்வு நாட்டு மக்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளது. வேற்றுமையில் ஒற்றுமைதான் இந்தியாவின் பலம் என்பதை நாம் கேள்விபட்டிருக்கிறோம். அதை மகா கும்பமேளாவில் நாம் பார்த்தோம். இதில் தேசிய உணர்வு வெளிப்பட்டது. இந்த உணர்வு நாம் பல இலக்குகளை அடைய உத்வேகம் அளிக்கும். இந்த பிரம்மாண்ட விழாவை சுமூகமாக நடத்தியவர்களுக்கும், பங்கேற்ற மக்களுக்கும் நன்றி. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்

x