பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி அவதூறு கருத்து தெரிவித்த மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தியை கைது செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.
கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாற்றின்கரையில் மறைந்த காந்தியவாதி கோபிநாதன் நாயர் சிலை திறப்பு விழாவுக்கு மகாத்மா காந்தியின் கொள்ளு பேரன் துஷார் காந்தி அழைக்கப்பட்டிருந்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி, ‘‘கேரளாவுக்குள் நுழைந்துள்ள பாஜக.,வும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் அபாயகரமான மற்றும் நயவஞ்சக எதிரிகள். ஆர்எஸ்எஸ் விஷம் போன்றது’’ என கூறினார்.
இதற்கு பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. தான் கூறிய கருத்தை துஷார் காந்தி திரும்ப பெற்று, மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக.,வினர் கூறினர். ஆனால் கொச்சி அருகே அலுவாவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய துஷார் காந்தி, ‘‘பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பற்றி நான் தெரிவித்த கருத்தை திரும்பபெற மாட்டேன், மன்னிப்பு கேட்கவும் மாட்டேன். இச்சம்பவம், துரோகிகளை தொடர்ந்து அம்பலப்படுத்துவதற்கான எனது உறுதியை வலுப்படுத்தியுள்ளது. இந்த போராட்டம், சுதந்திர போராட்டத்தை விட அவசியமானது. நமது பொதுவான எதிரி சங்பரிவார் அமைப்புதான். அவர்களின் சுயரூபத்தை வெளிப்படுத்த வேண்டும். எனது தாத்தாவை கொலை செய்தவரின் வழித்தோன்றல்கள், மகாத்மா காந்தியின் சிலைக்கு சென்றும் சுடுவர் ’’ என்றார்.
துஷார் காந்தி குறித்து பாஜக கூறுகையில், ‘‘ மகாத்மா காந்தியின் வழித்தோன்றலாக தவறாக பிறந்தவர் துஷார் காந்தி. அவர் தனது தாத்தாவின் பெயர் மூலம் பணம் சம்மாதிக்க முயற்சிக்கிறார்’’ என்றனர். நெய்யான்றின் கரையில் துஷார் காந்திக்கு எதிராக பாஜக நடத்திய போராட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் முரளீதரன், ‘‘ மகாத்மா காந்தியின் பெயரில் பணம் சம்பாதிக்க துஷார் காந்தி பல ஆண்டுகளாக முயற்சிக்கிறார். சிலை திறப்பு விழாவுக்கு அவரை அழைத்தவர்கள், அவரது பின்னணி தெரியாமல் அழைத்துவந்துவிட்டனர்.
காந்தியின் பெயரை தன்னுடன் வைத்துள்ள துஷார் காந்திக்கு, மகாத்மா காந்திக்குரிய மரியாதையை பெற தகுதி இல்லை. பாஜக அளித்து புகார் அடிப்படையில் துஷார் காந்தியை கைது செய்ய வேண்டும். அவருக்கு எதிராக கோஷமிட்ட பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் தொண்டர்களை கைது செய்தது கண்டனத்துக்குரியது’’ என்றார்.
துஷார் காந்திக்கு எதிராக செயல்பட்டவர்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் பினராயி விஜயன், ‘‘ஜனநாயக சமூகத்தில் பேச்சுரிமையை அடக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது’’ என்றார்