அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பிடமிருந்து நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலின் பேரில் ஏர்டெல், ஜியோ நிறுவனங்கள் அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் வணிக ஒப்பந்தங்கள் செய்து கொண்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளதாவது: எலான் மஸ்குக்கு சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவுக்குள் நுழைய கடந்தகாலங்களில் எதிர்ப்புக் குரல் எழுப்பியதில் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு முக்கிய பங்கு உண்டு.ஆனால், தற்போது அந்த நிறுவனங்கள் அனைத்து ஆட்சேபனைகளையும் மறந்து ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் உடன்படிக்கை செய்து கொண்டுள்ளன. அதுவும், 12 மணி நேரத்துக்குள்ளாக ஏர்டெல், ஜியோ ஆகிய நிறுவனங்கள் ஸ்டார்லிங்கிடம் செயற்கைகோளில் இருந்து நேரடியாக இணையசேவையை பெறுவதற்கான ஒப்பந்தங்களை உருவாக்கியுள்ளன. இதன் முழு பின்னணியில் அரசியல்தான் உள்ளது.
எலான் மஸ்க் மூலமாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிடம் பிரதமர் மோடி நல்ல பெயர் வாங்க வேண்டும் என்பதற்காகவே ஸ்டார்லிங்க் சேவையில் இணைய வேண்டும் என ஏர்டெல், ஜியோ நிறுவனங்களுக்கு அழுத்தம் தரப்பட்டுள்ளது. இதன்மூலம் ட்ரம்ப்பின் விருப்பமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடலாம் என்பது பிரதமர் மோடியின் எண்ணமாக உள்ளது.
ஆனால் இதில் பல கேள்விகள் அடங்கியுள்ளன. அதில் மிகவும் முக்கியமானது தேசிய பாதுகாப்பு தொடர்பானது. தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்போது இணைய இணைப்பை இயக்க அல்லது துண்டிக்க யாரிடம் அதிகாரம் இருக்கும் ? ஸ்டார்லிங்க் நிறுவனத்திடமா? அல்லது இந்திய நிறுவனங்களிடமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். மேலும், செயற்கைக்கோள் அடிப்படையில் இணைப்பு வழங்கும் பிற நிறுவனங்களுக்கு எதன் அடிப்படையில் இந்தியாவில் நுழைய அனுமதி கிடைக்கும்?. இதேபோன்ற கேள்விதான் இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி குறித்தும் உள்ளது. இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.