புதுடெல்லி: புதிய கல்விக் கொள்கை மற்றும் தொகுதி மறுவரையறை தொடர்பான விவாதம் மாநிலங்களவையில் நேற்று நடைபெற்றது.
அப்போது, பேசிய எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தேசிய தலைவருமான கார்கே, காலையில் தான் பேசியபோது கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இல்லாததால் தனது கருத்துகள் முழுமையடையவில்லை. எனவே, தன்னை மீண்டும் பேச அனுமதிக்க வேண்டும் என்று அவை துணைத் தலைவரிடம் முறையிட்டார். ஆனால், இதற்கு அனுமதி அளிக்க ஹரிவன்ஷ் தயங்கியதையடுத்து, ‘‘இது சர்வாதிகார போக்கு” நான் பேச வேண்டும். அதற்கு தயாராக வந்துள்ளோம் என்று அவைதலைவரை நோக்கி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
கார்கேவின் பேச்சுக்கு ஜே.பி.நட்டா உள்ளிட்ட பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து ஜே.பி. நட்டா கூறுகையில், ‘‘நீண்ட அனுபவம் வாய்ந்த எதிர்க்கட்சி தலைவர் இதுபோன்ற நாடாளுமன்றத்துக்கு புறம்பான மொழியை பயன்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, அவர் தனது கருத்துகளை திரும்பப்பெற்று மன்னிப்பு கோர வேண்டும்” என்றார். இதையடுத்து கார்கே பேசும்போது, ‘‘நான் கூறிய கருத்துகள் மத்திய அரசின் கொள்கைக்கு எதிரானதே தவிர, அவைத் தலைவருக்கு எதிரானது அல்ல. எனது கருத்து யாரையாவது புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதோடு, அந்த கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கிறேன்’’ என்றார்.