பெங்களூரு: கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் அதிகரித்து வரும் தெருநாய்களால் குழந்தைகளும் முதியவர்களும் மிகவும் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மார்ச் 2025-ல் தேசிய மனித உரிமைகள் ஆணையம் இந்திய முழுவதும் அதிகரித்து வரும் தெருநாய்க்கடி சம்பவங்களை, குறிப்பாக ஹரியானாவில் நடக்கும் தெருநாய்க்கடி தாக்குதல்களைக் கருத்தில் கொண்டு, அம்மாநிலத்தின் விலங்குகள் நல அமைப்புக்கு, இது தொடர்பாக விசாரணை நடத்தி எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. இது மிகப் பெரிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நாடு முழுவதும் 2024-ம் ஆண்டில் மட்டும் 21.95 லட்சம் நாய்க்கடி சம்பவம் பதிவாகியுள்ளன. அதில், 37 இறப்புகளும் அடங்கும். நாய்க்கடியில் பாதிக்கப்பட்டவர்களில் 5 லட்சம் பேர் குழந்தைகள் என்பதும் இங்கே கவனிக்கத்தக்கது.
தெருநாய்க்கடி பிரச்சினை என்பது இந்திய அளவில் அதிகரித்து வரும் ஒரு நெருக்கடியாகும். இதனால், ஒவ்வொருநாளும் குழந்தைகளும் முதியவர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2024-ல் சென்னையில் இதுபோல பல நாய்க்கடி சம்பவங்கள் வெளிச்சத்து வந்து கவனம் பெற்றன.
சன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பு பிரச்சினை: இந்த மனித - விலங்குகள் மோதல் பின்னணியில் பெங்களூருவின் இப்பலுரு - பெல்லாந்துரில் உள்ள சன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் இந்தப் பிரச்சினை தீவிரமாகி வருகிறது. அங்கு குடியிருப்பவர்கள் தெருநாய்கள் தொல்லையால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு குடியிருப்பு வளாகத்துக்குள் செயல்படும் ஒரு விலங்கு நல ஆர்வலர் மீது குற்றம்சாட்டுகின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக நீடிக்கும் இந்தப் பிரச்சினை சமீபத்தில் மிகவும் தீவிரமடைந்துள்ளது.
குடியிருப்பாளர்களின் கூற்றுப்படி, "தன்னை விலங்கு நல ஆர்வலராக கூறிக்கொள்ளும் இங்கு குடியிருந்து வரும் பெண் ஒருவர் கடந்த 2010 முதல் தெருநாய்களை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார். ஆரம்பத்தில் குடியிருப்புக்கு வெளியே ஒரு இடத்தில் நாய்களைத் தங்க வைத்து பாதுகாத்து வந்தவர். கரோனா தொற்று பிரச்சினைக்கு பின்பு அவர் நாய்களை பாதுகாத்து வந்த கட்டிடம் இடிக்கப்பட்டது மற்றும் சட்ட சிக்கல்களால் 12-க்கும் அதிகமான நாய்களை அடுக்குமாடி குடியிருப்புக்குள் கொண்டு வந்தார். இதனைத் தொடந்து தரைதளத்தில் எப்போதும் 9 - 12 நாய்கள் சுற்றிவருகின்றன. குழந்தைகள் முதியவர்களை அச்சுறுத்தி வருகின்றன.
மேலும், அவர் சுற்றுப்புறத்திலுள்ள நாய்களுக்கு உணவளித்து வருவதாக கூறுவதால் பல நாய்களும் அவரைப் பின்தொடர்ந்து வருகின்றன. இதனால் குடியிருப்பு வளாகத்தில் தெருநாய்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து விட்டன. இதனால் நாய்க்கடி, அவற்றின் ஆக்ரோஷமான நடத்தை மற்றும் விளையாடும் குழந்தைகள் நாய்களால் துரத்தப்படுதல் போன்ற பிரச்சினைகள் அதிகரித்துவிட்டன.
தவிர, அந்த விலங்குகள் நல ஆர்வலர் தனது செல்வாக்கினைப் பயன்படுத்தி, காவலர்கள், தோட்ட வேலை செய்பவர்கள் போன்றவர்களுடன் வலுவான கூட்டணியையும் உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், அந்த ஆர்வலர் தன்னிச்சையாக அங்கீகாரம் இல்லாமல் மூன்று கண்காணிப்பு கேமராக்களையும் பொருத்தியுள்ளார். இதனை அகற்ற குடியிருப்பு வாசிகள் கோரியும் அகற்றவில்லை என்றும் கூறப்படுகிறது.
இப்படியான தொடர் குற்றச்சாட்டுகளுக்கு பின்பு, அடுக்குமாடி குடியிருப்பாளர்கள் இந்த பிரச்சினையை காவல் துறை, பெங்களூரு மாநகராட்சி மற்றும் உள்ளூர் எம்எல்ஏ வரை கொண்டு சென்றுள்ளனர்.
இதனால், சில நிவாரணங்கள் கிடைத்துள்ளன என்றாலும், அந்த தன்னார்வலர் மீண்டும் நாய்களை குடியிருப்பு வளாகத்துக்குள் கொண்டு வர முயல்வதாக குற்றம்சாட்டுகின்றனர். மாநகராட்சியின் கணக்கெடுப்பின்படி சன் சிட்டி அடுக்குமாடி குடியிருப்பில் 19 தெருநாய்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.