லண்டனில் அமைச்சர் ஜெய்சங்கரை தாக்க முயற்சி: காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புக்கு மத்திய அரசு கண்டனம்


பிரிட்டிஷ் தலைநகர் லண்டனில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரை, காலிஸ்தான் ஆதரவாளர் தாக்க முயற்சி செய்தார். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறை பயணமாக கடந்த 4-ம் தேதி பிரிட்டன் தலைநகர் லண்டன் சென்றார். அங்கு பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், உள்துறை அமைச்சர் யெவெட் கூப்பர், வெளியுறவு அமைச்சர் டேவிட் லாமி ஆகியோரை சந்தித்துப் பேசினார். அப்போது உக்ரைன், மேற்கு ஆசியா, வங்கதேசம், காமன்வெல்த் குறித்து பிரிட்டிஷ் தலைவர்களுடன் அமைச்சர் ஜெய்சங்கர் விரிவான ஆலோசனை நடத்தினார்.

லண்டனில் அமைந்துள்ள ராயஸ் இன்ஸ்டிடியூட் ஆப் இன்டர்நேஷனல் அபர்ஸ் என்ற சிந்தனைக் குழுவின் சிறப்பு விவாதத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பங்கேற்றார். அப்போது காஷ்மீர் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் ஜெய்சங்கர், “பாகிஸ்தானிடம் இருந்து ஆக்கிரமிப்புகளை மீட்டுவிட்டால் காஷ்மீரின் அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும்" என்று தெரிவித்தார்.

இந்த விவாத நிகழ்ச்சி நடைபெற்ற லண்டனின் சாத்தம் ஹவுஸுக்கு வெளியே காலிஸ்தான் தீவிரவாதிகள் தொடர்ச்சியாக கோஷமிட்டு கொண்டிருந்தனர். விவாத நிகழ்ச்சி நிறைவுக்கு பிறகு அமைச்சர் ஜெய்சங்கர் தனது காரில் ஏற வந்தார். அப்போது, காலிஸ்தான் ஆதரவாளர் ஒருவர், இந்திய தேசிய கொடியுடன் ஜெய்சங்கரின் காருக்கு முன்பாக வழிமறித்தார். அந்த நபரை பிரிட்டிஷ் பாதுகாப்புப் படை வீரர்கள் சுற்றி வளைத்தனர். அப்போது காலிஸ்தான் ஆதரவாளர் தனது கையில் இருந்த இந்திய தேசிய கொடியை கிழித்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறும்போது, “அமைச்சர் ஜெய்சங்கர் மீது தாக்குதல் நடத்த காலிஸ்தான் ஆதரவாளர் முயற்சி செய்துள்ளார். பிரிட்டிஷ் பாதுகாப்புப் படை வீரர்கள் தாக்குதலை முறியடித்தனர்" என்று தெரிவித்தன. மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஸ்வால் டெல்லியில் நேற்று கூறியதாவது:

அமைச்சர் ஜெய்சங்கரின் நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு இருந்துள்ளது. இதுதொடர்பான வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளின் சட்டவிரோத செயல்களை இந்தியா வன்மையாகக் கண்டிக்கிறது. சில பிரிவினைவாதிகள் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்துகின்றனர். இத்தகைய நடவடிக்கைகளை பிரிட்டிஷ் அரசு தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு ரன்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார்.

அமைச்சர் ஜெய்சங்கர் மீது தாக்குதல் நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது குறித்து பிரிட்டிஷ் அரசு அதிகாரப்பூர்வமாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. எனினும் இந்தியாவுடனான வர்த்தகம் குறித்து பிரிட்டிஷ் அரசு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

பிரிட்டிஷ், இந்திய வெளியுறவு அமைச்சர்களின் பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக அமைந்தது. பிரிட்டனில் ரூ.1,121.34 கோடியை முதலீடு செய்ய இந்தியா முன்வந்திருக்கிறது. இதன்மூலம் பிரிட்டனின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும். வேலைவாய்ப்புகள் பெருகும்.

பெல்பாஸ்ட், மன்செஸ்டர் நகரங்களில் இந்திய தூதரங்களை திறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதை வரவேற்கிறோம். செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடர்பு, கனிம வளம், சுகாதாரம், விநியோக சங்கிலி, புதுமை கண்டுபிடிப்புகள் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். இவ்வாறு பிரிட்டிஷ் அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

x