பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியின் தம்பி ஆனந்த் குமாரின் மகன் ஆகாஷ் ஆனந்த். பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்தார். மாயாவதியின் அரசியல் வாரிசாக கருதப்பட்டார்.
இந்நிலையில் ஆகாஷ் ஆனந்தை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக மாயாவதி நேற்று முன்தினம் அறிவித்தார். இது கட்சியினர் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதையடுத்து கட்சிப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது குறித்து எக்ஸ் தளத்தில் ஆகாஷ் ஆனந்த் நேற்று தனது கருத்தை பதிவிட்டிருந்தார். இந்தப் பதிவால் கோபமடைந்த மாயாவதி, ஆகாஷ் ஆனந்தை கட்சியை விட்டே நீக்குவதாக அறிவித்தார்.
இதுகுறித்து மாயாவதி வெளியிட்ட பதிவில், "ஆகாஷ் மனந்திருந்தி தனது முதிர்ச்சியை காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவரது பதில் வருத்தம் மற்றும் முதிர்ச்சியை காட்டவில்லை. மாறாக சுயநலம், ஆணவத்தையே காட்டுகிறது" என்று கூறியுள்ளார்.