எதிர்பார்த்தது 45 கோடி... வந்தவர்கள் 66 கோடி! - எப்படி இருந்தது மகா கும்பமேளா?


பிரயாக்ராஜ் நகரில் கடந்த 45 நாட்களாக நடைபெற்ற மகா கும்பமேளா சிவராத்திரி புனித குளியலுடன் நேற்று முடிவடைந்தது. இதில் 45 கோடி பேர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்து 66 கோடியை எட்டியது.

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் கடந்த ஜனவரி 13-ம் தேதி மகா கும்பமேளா தொடங்கியது. இவ்விழாவை முன்னிட்டு, கங்கையும், யமுனையும், சரஸ்வதியும் ஒன்று கூடும் இடமான திரிவேணி சங்கமத்தில் தினமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் புனித நீராடினர். பல்வேறு அகாராக்களைச் சேர்ந்த துறவிகள் இதில் பங்கேற்றனர்.

மகா கும்பமேளாவில் திரிவேணி சங்கமம் தவிர அனுமன் கோவில், அலோபி தேவி ஆலயம், மங்கமேஸ்வர் கோவில் போன்ற தொன்மையான கோவில்களும், அசோகர் ஸ்தூபி, அலகாபாத் பல்கலைக்கழகம், சுவராஜ் பவன் போன்ற வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களும் பக்தர்களை கவர்ந்தன. மத்திய கலாச்சார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட காலாகிராம் எனப்படும் கலாச்சாரக் கிராமம் இந்தியாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது. கைவினைப் பொருட்கள், பாரம்பரிய உணவுப் பொருட்கள், கலை, கலாச்சார நிகழ்வுகள், கண்காட்சிகள் போன்றவை இங்கு இடம் பெற்றிருந்தன.

துறவிகளின் முகாம்களில், தியானம், விவாதங்கள், தத்துவ உரையாடல்கள் ஆகியவை இடம்பெற்றன. பக்தர்களுக்கு உரிய தகவல்களை அவ்வப்போது வழங்குவதற்கு டிஜிட்டல் தொடர்பு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேச அரசால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ட்ரோன் அணிவகுப்பு பக்தர்களை கவர்ந்தது.

மகா கும்பமேளாவை முன்னிட்டு பிப்ரவரி 7 முதல் 10 வரை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை, நடன கலை நிகழ்ச்சிகளில் பிரபல கலைஞர்கள் கலந்து கொண்டனர். பாவங்களைப் போக்கவும் மோட்சத்தை அடையவும் வழி வகுப்பதாக நம்பப்படும் ஷாஹி ஸ்னான் என்னும் முக்கிய சடங்கை முன்னிட்டு லட்சக்கணக்கானவர்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள்.

ஆயிரக்கணக்கான தங்கும் விடுதிகள், கூடாரங்களை அமைத்து மகா கும்பமேளா நடைபெற்ற பகுதி, தற்காலிக நகரமாக மாற்றி அமைக்கப்பட்டிருந்தது. அலைகடலென மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கும்பமேளா பகுதியைச் சுற்றி சுமார் 2000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, உயர்தர சிகிச்சைகள் வழங்கப்பட்டன.

செயற்கை நுண்ணறிவால் இயக்கப்பட்ட கண்காணிப்பின் வாயிலாக கும்பமேளா பகுதி முழுவதும் ஏழடுக்கு பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது. துணை ராணுவப் படையினர், 14,000 ஊர்க்காவல் படையினர் உட்பட 50,000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததுடன், 2,750 செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன.

தடையற்ற போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பை உறுதி செய்ய பிரயாக்ராஜ் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் பக்தர்களின் வருகையைக் கையாள இந்திய ரயில்வே பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இந்தியாவின் பல்வேறு முக்கிய பகுதிகளில் இருந்து பிரயாக்ராஜிற்கு தேவைகளின் அடிப்படையில் ஏறத்தாழ 1000 ரயில்கள் இயக்கப்பட்டன.

ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) மற்றும் அரசு ரயில்வே காவல்துறை (ஜி.ஆர்.பி) ஆகியவற்றைச் சேர்ந்த 10,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் முக்கிய நிலையங்களில் பணியமர்த்தப்பட்டர். ட்ரோன்கள், கண்காணிப்பு கேமராக்கள், செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான முன்னறிவிப்பு மாதிரிகள் போன்றவை அமைக்கப்பட்டன.

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மற்றும் கஜேந்திர சிங் ஷெகாவத், அர்ஜுன் ராம் மேக்வால், ஸ்ரீபாத் நாயக் போன்ற மத்திய அமைச்சர்கள் கும்பமேளாவில் கலந்து கொண்டு புனித நீராடினார்கள்.

சுதான்ஷு திரிவேதி, அனுராக் தாக்கூர், சுதா மூர்த்தி, ரவி கிஷன் முதலிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் மகா கும்பமேளாவில் கலந்து கொண்டனர். இவர்களுடன், விளையாட்டு வீரர்களான சாய்னா நேவால், சுரேஷ் ரெய்னா, காளி என்ற தலிப் சிங் ராணாவும், பிரபல கவிஞரான குமார் விஷ்வாஸ், பிரபல நடன இயக்குனர் ரெமோ டி'சோசா, நடிகைகள் கத்ரீனா கைஃப், ரவீனா டாண்டன் ஆகியோரும் திரிவேணி சங்கமத்தில் நீராடினார்கள்.

x