வலுக்கும் தேசிய கல்விக் கொள்கை விவகாரம்: ‘தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுப்பதால் எஸ்எஸ்ஏ நிதியை தமிழகத்துக்கு ஒதுக்க முடியாது’ என மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதற்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழகத்துக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக பேசினால் தமிழர்களின் தனிக்குணத்தை டெல்லி பார்க்க வேண்டியிருக்கும் என மத்திய அமைச்சருக்கு முதல்வர் ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
“நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழகத்தை மிரட்டுகிறார்கள். தமிழகத்தை சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்” எனும் ரீதியிலாக காட்டமான கருத்துகளும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
“தேசிய கல்விக் கொள்கையில் மோடி அரசு உறுதி” - “தமிழ்நாட்டில் ஒரு மாணவர் கல்வியில் பன்மொழி அம்சத்தைக் கற்றுக்கொண்டால் அதில் என்ன தவறு இருக்கிறது? தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி என்பதைதான் தேசிய கல்விக் கொள்கை சொல்கிறது. இந்தியோ அல்லது வேறு எந்த ஒரு மொழியுமோ திணிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் உள்ள சில நண்பர்கள் அரசியல் செய்கிறார்கள். ஆனால், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது” என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மீண்டும் விளக்கம் அளித்துள்ளார்.
‘தமிழகத்துக்கு புதிய கல்விக் கொள்கை அவசியம்’ - பாஜக: “தமிழகத்துக்கு கடந்த 10 ஆண்டுகளில் மத்திய அரசு பல்வேறு திட்டங்களுக்கு 11 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியுள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஒப்புக்கொள்வது உள்ளிட்ட அனைத்து விதிமுறைகளுக்கு தமிழக அரசு முதலில் சம்மதம் தெரிவித்தது. தற்போது எதிர்க்கின்றனர். தமிழக மக்கள் மீதும், தமிழ்நாட்டின் கலாச்சாரம், பண்பாட்டின் மேல் பிரதமர் மிகுந்த பற்று வைத்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் அரசியலுக்காக மக்களை தவறாக திசை திருப்புகிறார். 1965-ம் ஆண்டு ஆட்சி இப்போது நடக்கவில்லை, புதிய கல்விக் கொள்கையின் அவசியம் இன்று எழுந்துள்ளது” என மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். >>விரிவாக வாசிக்க
திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு: தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு தமிழகத்தில் ஆளும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், அதிமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதன் தொடர்ச்சியாக திமுக கூட்டணி கட்சிகள் மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்பாட்டத்தை அறிவித்துள்ளன.
“பதவிக்காலம் முடிந்துபோன ஆளுநரை வைத்துக் கொண்டு அத்துமீறல்கள், யுஜிசி மூலம் மாநிலத்தின் கல்விக் கட்டமைப்பைச் சிதைப்பதற்கான நடவடிக்கைகள், தொடர்ச்சியான திராவிட - தமிழ் வெறுப்பு நடவடிக்கைகள், மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்புக்கான முன்னெடுப்புகள் என தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கும் மோடி அரசை வீறுகொண்டு எதிர்க்க வேண்டிய சூழலை உருவாக்கி வருகின்றனர்.
தமிழர்கள் தனித்துவமானவர்களாக இருப்பதும் கல்வி - வேலைவாய்ப்பு - சமூக நீதி - வாழ்க்கைத்தரம் என அனைத்து வகையிலும் உயர்ந்திருப்பதும் மோடி அரசின் கண்களை உறுத்துகிறது. அது, அரசியல்ரீதியாகப் பாஜகவை அண்டவிடாத தமிழக மக்களின் மீது வெறுப்பை உமிழ்கிறது. பிளவுவாத சக்திகளுக்கு எதிராக ஓரணியில் நிற்கும் தமிழகத்தை வீழ்த்திவிட முயற்சிக்கிறது.
வீழ்த்த முயற்சிக்கும் போதெல்லாம் தமிழகம் ஒன்றிணையும், எதிரி எந்த வடிவில் வந்தாலும் துணிந்து நிற்கும். அப்படியான ஒரு சூழலை வலிந்து உருவாக்கி வரும் மோடி அரசைக் கண்டித்து முதற்கட்டமாக அனைத்துக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகம் முன்பாக நடைபெறுகிறது என்று திமுக கூட்டணி தெரிவித்துள்ளது.
டெல்லியில் நிலநடுக்கம் - ரிக்டரில் 4 ஆக பதிவு: டெல்லியில் திங்கள்கிழமை காலை 5.36 மணிக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது ரிக்டர் அளவுகோளில் 4.0 அலகுகளாக பதிவானதாகவும் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியின் துர்காபாய் தேஷ்முக் கல்லூரி பகுதியை மையமாகக் கொண்ட இந்த நிலநடுக்கம் 5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின்போது, டெல்லி, நொய்டா, கிரேட்டர் நொய்டா மற்றும் காஜியாபாத் உள்ளிட்ட பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறினர். இந்த நிலநடுக்கம் டெல்லியைச் சுற்றி உள்ள பிஹார், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் உணரப்பட்டது.
நெல்லை, குமரி, தூத்துக்குடி தாதுமணல் கொள்ளை வழக்கில் அதிரடி - கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட்ட கடலோர பகுதிகளில் தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ரூ.1,000 கோடிக்கு மேல் அரசுக்கு வருவாய் இழப்பு என்பதால் அந்நிறுவனங்களின் வரவு செலவு கணக்குகளை அமலாக்கத் துறை மற்றும் வருமான வரித்துறை ஆய்வு செய்ய மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. >>விரிவாக வாசிக்க
விவசாய மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த முடிவு: தமிழகத்தில் மின் பயன்பாட்டு விவரங்களை துல்லியமாக அறிவதற்காக, விவசாய மின் இணைப்புகளில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்த மின் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. >>விரிவாக வாசிக்க
டெல்லி ரயில் நிலையத்தில் பலத்த பாதுகாப்பு: பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் பங்கேற்க புதுடெல்லி ரயில் நிலையத்தில் சனிக்கிழமை இரவு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பயணிகள் திரண்டதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 18 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது ரயில் நிலையத்தில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது. >>விரிவாக வாசிக்க
இந்தியாவுக்கான ரூ.182 கோடி அமெரிக்க நிதியுதவி ரத்து: இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்க அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி ரத்து செய்யப்பட்டு உள்ளது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தொடரும் ‘கைவிலங்கு’ சர்ச்சை: அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள் என அறிவித்தார். அதன்படி அங்கு சட்டவிரோதமாக குடியேறியவர்களை நாடுகடத்தும் நடவடிக்கையை அமெரிக்க அரசு மேற்கொண்டுள்ளது. இதன்படி அமெரிக்காவில் இருந்து 104 இந்தியர்களுடன் முதல் விமானம் கடந்த 5-ம் தேதி அமிர்தசரஸ் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இவர்கள் கை, கால்களில் விலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
இதையடுத்து 112 இந்தியர்களுடன் இரண்டாவது விமானம் கடந்த 15-ம் தேதி (சனிக்கிழமை) இரவு அமிர்தசரஸ் வந்தது. இதிலும் இந்தியர்கள் விலங்கிடப்பட்டு அழைத்துவரப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், இரண்டாவது விமானத்தில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் விலங்கிடப்படவில்லை, அவர்கள் கைதிகளை போல நடத்தப்படவில்லை என தகவல் அறிந்த வட்டாரங்கள் உறுதி செய்தன.
இந்தச் சூழலில் ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு மூன்றாவது விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையம் வந்தடைந்தது. அந்த விமானத்தில் வந்த பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது இளைஞர், தடுப்புக் காவல் முகாமில் தங்கியிருந்த போது அமெரிக்க அதிகாரிகள் துன்புறுத்தியதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தனது தலைப்பாகையை அகற்றி குப்பையில் வீசியதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், “அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி வந்த 36 மணி நேர பயணம் முழுவதும் எனது கைகளில் கைவிலங்கு பூட்டியும், கால்கள் கட்டப்பட்டும் இருந்தது. கழிவறை செல்லும்போது மட்டுமே அது கழட்டப்பட்டது. இப்போது இந்தியாவில் வேலை தேட உள்ளேன்” என ஜதீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள இந்தியர்களில் இதுவரை சுமார் 330 பேர் இந்தியா திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதயநிதி பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு: ‘ஏஞ்சல்’ படத்தின் படப்பிடிப்பை முடித்து கொடுக்காததால், 25 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி பட தயாரிப்பாளர் தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. >>விரிவாக வாசிக்க