டெல்லியில் 4.0 ரிக்டரில் நிலஅதிர்வு; குலுங்கிய கட்டிடங்கள்: ஆழமற்ற நிலநடுக்கம் என்றால் என்ன?


புதுடெல்லி: தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று அதிகாலை 5.36 மணி அளவில் 4.0 ரிக்டரில் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலஅதிர்வின் தாக்கம் காரணமாக கட்டிடங்கள் மிகப்பெரிய அளவில் குலுங்கியதால் டெல்லிவாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

டெல்லியை மையமாகக் கொண்டு வட இந்தியா முழுவதும் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக அந்த மையம் தெரிவித்துள்ளது. பூமியில் 5 கி.மீ. ஆழத்தில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் உறுதியாகி உள்ளது. இதுபோன்ற பாதிப்பினை ஏற்படுத்தும் நில அதிர்வுக்கு புவியியல் நிபுணர்கள் 'ஆழமற்ற நிலநடுக்கம்’ ( shallow earthquake ) எனக் குறிப்பிடுகின்றனர்.

ஆழமற்ற நிலநடுக்கமானது ( shallow earthquake ) பூமியின் மேற்பரப்பை ஒட்டிய பகுதியில் மையம் கொண்டிருக்கும். அதாவது பூமிக்கு கீழ் 5 முதல் 10 கிலோ மீட்டர் ஆழத்திலேயே மையம் கொண்டிருக்கும். இதனாலேயே இவை வழக்கமாக அதிக ஆழத்தில் மையம் கொண்டிருக்கும் நிலநடுக்கத்தைவிட அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.

நிலநடுக்கத்தின் ஆழத்தைப் பொறுத்து புவியியல் நிபுணர்கள் அதனை வகைப்படுத்துகின்றனர். அதன்படி பூமிக்கு அடியில் 0 முதல் 70 கி.மீ ஆழம் வரை மையம் கொண்ட நிலநடுக்கங்களை ஆழமற்றவை அல்லது நடுத்தரமான நிலநடுக்கம் என்றும், 70 முதல் 300 கிமீ அழம் வரையில் மையம் கொள்ளும் நிலநடுக்கங்களை ஆழமானவை என்றும், 300 கிலோமீட்டரையும் கடந்த ஆழத்தில் மையம் கொள்பவற்றை மிக ஆழமான நிலநடுக்கம் என்றும் வரையறுத்து வைத்துள்ளனர். இதன்மூலம் டெல்லியில் ஏற்பட்ட நில அதிர்வு பூமிக்கு அடியில் 5.5 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டதால், இதனை ஆழமற்றது, அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்று நாம் வகைப்படுத்தலாம்.

ஆழமற்ற நிலநடுக்கத்துக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தை உதாரணமாகக் கூறலாம். இந்த நிலநடுக்கத்தில் 160 பேர் உயிரிழந்தனர். பல கட்டிடங்கள் தரைமட்டமாகின. அந்த வகையில் ஆழமற்ற நிலநடுக்கங்கள் / நில அதிர்வுகள் ரிக்டரில் குறைந்த அளவில் இருந்தாலும் கூட அதன் பாதிப்பு அதிகமாக அமைந்து விடுகிறது.

ஆழமான நிலநடுக்கங்களில் இருந்து வரும் நில அதிர்வு அலைகள் மேற்பரப்பில் அதிக தூரம் பயணிக்க வேண்டும், வழியில் ஆற்றலை இழக்கின்றன. இதனாலேயே இத்தகைய நில அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்குவது அதிகமாக இருக்கிறது.

x