டாப் 10 செய்திகள்: ட்ரம்ப் - மோடி சந்திப்பு ஹைலைட்ஸ் முதல் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு வரை


அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி சந்திப்பு: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் சந்தித்துப் பேசினார். இரு தலைவர்களும் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு, விண்வெளி தொழில்நுட்பம், கல்வி உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர். இந்தச் சந்திப்பின்போது, வரும் 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகத்தை ரூ.43.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

இந்தியாவிடம் ராணா ஒப்படைக்க ட்ரம்ப் சம்மதம்: பிரதமர் மோடியுடன் நிருபர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ஹூசைன் ராணா இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவார். அவர் இந்தியாவில் நீதி விசாரணையை எதிர்கொள்வார். அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து முஸ்லிம் அடிப்படைவாத தீவிரவாதத்துக்கு எதிராக போரிடும்” என்றார்.

மேலும், “இரு நாடுகள் இடையிலான பாதுகாப்பு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். குறிப்பாக அமெரிக்காவின் அதிநவீன எப்-35 ரக போர் விமானங்கள் இந்தியாவுக்கு வழங்கப்படும்” என்றார்.

வர்த்தக விவகாரங்களுக்குத் தீர்வு - ட்ரம்ப் உறுதி: “இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால், அமெரிக்காவில் இருந்து குறைவான பொருட்களையே இந்தியா இறக்குமதி செய்கிறது. இந்த வர்த்தக பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவில் இருந்து கச்சா எண்ணெய், எரிசக்தி உள்ளிட்டவை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும். செயற்கை தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த இரு நாடுகளும் இணைந்து பணியாற்றும்” என்று ட்ரம்ப் தெரிவித்தார்.

மேலும், “இந்திய, சீன எல்லை பகுதிகளில் அடிக்கடி மோதல்கள் நடைபெறுகின்றன. இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா தயாராக இருக்கிறது. வங்கதேச விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. அந்த பிரச்சினையை பிரதமர் நரேந்திர மோடியே கையாள்வார். தூதரக ரீதியில் சமரச பேச்சுவார்த்தை நடத்துவதில் என்னைவிட பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர். அவருக்கு இணை யாருமே கிடையாது” என்றார் ட்ரம்ப்.

உக்ரைன் போர் - இந்திய நிலைப்பாடு என்ன?: வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்புடன் உடன் செய்தியாளர்களை சந்தித்த பிரதமர் மோடி, “கடந்த 2008-ம் ஆண்டு மும்மையில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளி ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க முன்வந்த அதிபர் ட்ரம்புக்கு நன்றி கூறுகிறேன்” என்றார்.

மேலும், “உக்ரைன் போரை நிறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுடன் அதிபர் ட்ரம்ப் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது. நாங்கள் எந்த பக்கமும் சாய்வது கிடையாது. எப்போதும் அமைதியின் பக்கம் நிற்கிறோம்” என்றார் மோடி.

இந்தியர்களை அழைத்துக்கொள்ள உறுதி: அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் குறித்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மோடி, “மற்ற நாடுகளில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களுக்கு அங்கு இருக்க எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை. இந்தியா மற்றும் அமெரிக்காவைப் பொறுத்தவரை, உண்மையிலேயே இந்தியாவின் குடிமக்கள் அமெரிக்காவில் சட்டவிரோதமாக வசிக்கிறார்கள் என்றால், அவர்களை மீண்டும் அழைத்துச் செல்ல இந்தியா தயாராக உள்ளது என்பதை நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம்.

மேலும், நாங்கள் இதோடு நிற்கவில்லை. இவ்வாறு சட்டவிரோதமாக தங்குபவர்கள் சாதாரண குடும்பங்களிலிருந்து வருகிறார்கள். அவர்களுக்கு பெரிய கனவுகள் காட்டப்படுகின்றன. அவர்கள் பெரும்பாலும் தவறாக வழிநடத்தப்பட்டு இங்கு கொண்டு வரப்படுகிறார்கள். இதன் பின்னணியில் மனிதக் கடத்தல் உள்ளது. மனித கடத்தலின் முழு அமைப்பையும் நாம் அகற்ற வேண்டும்.

மனித கடத்தல் முடிவுக்கு வரும் வகையில், இதற்கான சூழல் அமைப்பை அதன் வேரில் இருந்து அகற்ற அமெரிக்காவும் இந்தியாவும் இணைந்து செயல்பட வேண்டும். இந்த அமைப்புக்கு எதிரானது எங்கள் போராட்டம். இந்த முயற்சியில் அதிபர் ட்ரம்ப், இந்தியாவுடன் முழுமையாக ஒத்துழைப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று மோடி தெரிவித்தார்.

இதனிடையே, சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருந்த 119 இந்தியர்கள் அடுத்த இரு தினங்களில் பஞ்சாபின் அமிர்தசரஸ் வழியாக தாயகம் வந்தடைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருப்பரங்குன்றம் போராட்டம்: ஐகோர்ட் சொல்வது என்ன?: ‘திருப்பரங்குன்றம் மலை சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்துவதற்கு எந்த அவசியமும் இல்லை. அப்படி போராட்டம் நடத்தினால், அது பிற மதத்தினரை மீண்டும் தூண்டி பொது அமைதிக்கு அது பாதிப்பை ஏற்படுத்தும். பொது அமைதி மற்றும் மதநல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படக்கூடிய எந்தவொரு போராட்டத்துக்கும் காவல்துறை அனுமதி வழங்கக் கூடாது” என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“களையெடுப்பல்ல... கட்டுமானச் சீரமைப்பு” - ஸ்டாலின்: “2026 சட்டமன்றத் தேர்தலில் இருநூறு தொகுதிகள் இலக்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றியினை உறுதி செய்யும் வகையில், களத்திற்கேற்ற வியூகம் அமைத்து, வெற்றிப் பாதையில் பயணிப்பதற்காக கட்சியின் மாவட்டப் பொறுப்புகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது களையெடுப்பு அல்ல, கட்டுமானச் சீரமைப்பு,” என்று திமுக தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

“செங்கோட்டையன் உறுதுணையாக இருப்பார்”: “அரசியலில் மிகப் பெரிய அனுபவம், ஏற்றத் தாழ்வுகளை சந்தித்தவர் செங்கோட்டையன். அவரை ஜெயலலிதா மதிப்பும், மரியாதையுடன் நடத்தினார். அதேபோல் தான் எடப்பாடி பழனிசாமியும் நடத்திச் செல்கிறார். அவரது மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி, கட்சியை காட்டி கொடுத்துவிட்டு எதிரணியில் சேர்ந்து அமைச்சராக இருக்கிறார். ஆனால், எவ்வளவு சோதனைகள் வந்தாலும் செங்கோட்டையன் அதிமுகவுக்கு உறுதுணையாக இருப்பார் என்கிற நம்பிக்கை உள்ளது” என்று அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.

செர்னோபில் அணு உலை மீது ரஷ்யா தாக்குதல் - உக்ரைன்: செர்னோபில் அணு மின்நிலையத்தில் உள்ள கைவிடப்பட்ட அணு உலையின் மீது ரஷ்யா ட்ரோன் மூலம் தாக்கியுள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

தவெக தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு அளித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்குழு கூட்டத்தை மாமல்லபுரத்தில் பிப்ரவரி 26-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதைத்தொடர்ந்து மார்ச் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஜய்யின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், முக்கிய பிரபலங்கள், அரசியல் தலைவர்களுக்கு வழங்கப்படும் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு பணியில் சிஆர்பிஎஃப் வீரர்கள், துப்பாக்கி ஏந்திய போலீஸார் என 8 முதல் 10 பேர் வரை இடம்பெறுவர்.

x