நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த ஜனவரி 31-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத் தொடர் 2 அமர்வுகளாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். பிப்ரவரி 1-ம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்தது.
இந்த கூட்டத் தொடரின் முதல் அமர்வின் கடைசி நாளான நேற்று கலையில் மக்களவை கூடியதும் குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபருக்கு ஒரு திட்டம் ஒதுக்கீடு செய்தது குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பிரச்சினை எழுப்பினர். அவையை சுமுகமாக நடத்த ஒத்துழைப்பு தருமாறு சபாநாயகர் ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். ஆனால் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் அவையை 2 மணி வரை ஒத்தி வைத்தார்.
பின்னர் அவை கூடியதும் எதிர்க்கட்சியினரின் எதிர்ப்பை மீறி, வருமான வரி புதிய மசோதாவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அப்போது, இந்த மசோதாவை மக்களவை தேர்வுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்குமாறு சபாநாயகரை கேட்டுக் கொண்டார். இதையடுத்து, மக்களவையின் முதல் அமர்வு நிறைவு பெற்றது. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு மார்ச் 10-ம் தேதி முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை நடைபெற உள்ளது.