சீக்கிய கலவர வழக்கில் காங். முன்னாள் எம்.பி. சஜ்ஜன் குமார் குற்றவாளி: நீதிமன்றம் தீர்ப்பு


டெல்லியில் கடந்த 1984-ம் ஆண்டு நடைபெற்ற சீக்கிய கலவரத்தின்போது, சரஸ்வதி விஹார் பகுதியில் இரண்டு பேர் கொல்லப்பட்ட வழக்கில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சாஜன் குமார் குற்றவாளி என டெல்லி நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கடந்த 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி, பாதுகாப்பு பணியில் இருந்து சீக்கிய வீரரால் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் சீக்கியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மறுநாள் சரஸ்வதி விஹார் பகுதியில் சீக்கியர் ஒருவரின் வீடு தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதில் ஜஸ்வந்த் சிங் மற்றும் அவரது மகன் தரூன்தீப் சிங் ஆகியோர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் பலர் காயம் அடைந்தனர். வீட்டில் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இந்த கலவரம் காங்கிரஸ் முன்னாள் எம்.பி சாஜன் குமார் தூண்டுதலின் பேரில் நடைபெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக டெல்லி பஞ்சாபி பாஹ் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சீக்கிய கலவரத்தை விசாரிப்பதற்கு அமைக்கப்பட்ட நீதிபதி ஜி.பி. மாத்தூர் கமிட்டி பரிந்துரையின் பேரின் இந்த வழக்கை சிறப்பு விசாரணைக் குழுவினர் விசாரித்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இதில் சாஜன் குமார் மீதான குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிருபிக்கப்பட்டது. தன்மீதான குற்றச்சாட்டுகளை சாஜன் குமார் மறுத்தார். இதையடுத்து டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில், சாஜன் குமார் குற்றவாளி என அறிவித்தது.

டெல்லி கன்டோன்மென்ட் பகுதியில் சீக்கியர்களுக்கு எதிராக நடைபெற்ற மற்றொரு கலவர வழக்கில் சாஜன் குமார் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். இந்நிலையில் சரஸ்வதி விஹார் பகுதி கலவர வழக்கிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கான தண்டனை இனிமேல் அறிவிக்கப்படவுள்ளது

x