டாப் 10 செய்திகள்: பாதாளத்தில் பங்குச் சந்தை முதல் தங்கம் விலை புதிய உச்சம் வரை!


பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை வர்த்தகம் நிறைவைந்தபோது சென்செக்ஸ் 1,018.20 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 76,293.60 ஆக இருந்தது. அதேவேளையில், தேசியப் பங்குச் சந்தையில் நிஃப்டி 309.80 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23,071.80 ஆக இருந்தது. அண்மையில், அமெரிக்கா இறக்குமதி செய்யும் அலுமினியம் மீதான வரியை 10லிருந்து 25% ஆக உயர்த்தி அதிபர் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதுதான் பங்குச்சந்தைகளின் வீழ்ச்சிக்குக் காரணம் என்று தெரிகிறது.

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் வரி விதிப்பு அறிவிப்புக்கு பிறகு, உலக நாடுகளின் நாணயங்கள் பல மதிப்பு குறைவது, தங்கம் விலை உயர்வவது போன்ற மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இரும்பு, அலுமினிய இறக்குமதிக்கு தலா 25 சதவீதம் வரை வரி விதிக்கப்படலாம் என அறிவிப்பு வெளியானது பங்குச்சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், வெளிநாட்டு நிதி வெளியேற்றம் தொடர்வதாலும் பங்குச்சந்தை கடுமையான சரிவை சந்தித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ஏஐ வளர்ச்சி தாக்கம்: பிரான்ஸில் மோடி பேச்சு - பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, “ஏஐ வளர்ச்சியால் மனித வேலைவாய்ப்புகள் பறிபோய்விடுமோ என்ற அச்சம் தான் இந்த தொழில்நுட்பத்துக்கான மிகப் பெரிய இடையூறாக இருக்கிறது. ஆனால், வரலாற்றுச் சான்றுகளின்படி எந்தவொரு தொழில்நுட்ப வளர்ச்சியும் மனித வேலைகளை பறித்ததில்லை” என்று நம்பிக்கையுடன் பேசினார்.

உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்: பட்டுக்கோட்டை பள்ளத்தூர் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி 7-ம் வகுப்பு மாணவி கவிபாலா வகுப்பிலேயே மயங்கி விழுந்து உயிரிழந்த நிலையில், அந்த மாணவியின் குடும்பத்துக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.5 லட்சம் வழங்கிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செங்கோட்டையன் கருத்து: செல்லூர் ராஜூ சொல்வது என்ன? - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அதிமுகவையும், பொதுச் செயலாளர் கே.பழனிசாமியையும் குறை சொல்லவில்லை. அப்புறம் எதற்கு அதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கோபமாக கூறியுள்ளார்.

தமிழக அரசு மீது அன்புமணி அதிருப்தி: ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.6-க்கும் குறைந்த செலவில் தயாரிக்க முடியும் எனும் நிலையில், ரூ.20-க்கும் அதிக விலை கொடுத்து வாங்குவதை ஏற்க முடியாது. இதே நிலை நீடித்தால் எத்தனை முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் மின்சார வாரியத்தை லாபத்தில் இயக்க முடியாது. எனவே, நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின்னுற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

செல்வப்பெருந்தகை கண்டனம்: கன்னியாகுமரி மாவட்டம், மாத்தூர் தொட்டிபாலத்தில் அமைந்துள்ள காமராஜரின் உருவம் பதித்த கல்வெட்டு மர்ம நபர்களால் உடைக்கப்பட்டு, சேதப்படுத்தப்பட்டதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன் என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். திருவுருவச் சிலையும், கல்வெட்டும் விரைவில் திறக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

அமைச்சர் சேகர்பாபு கருத்து: மக்களின் அன்பை பெற்றவர்கள், மக்களோடு பயணிப்பவர்களுக்கு, தேர்தல் வியூக மன்னா்களால் எவ்வளவு தூரம் பயனிருக்கும் என்பது தெரியவில்லை. எங்களைப் பொறுத்தவரையில், நாங்கள் மக்களோடு கூட்டணியை வைத்துள்ளோம் என்று தவெக தலைவர் விஜய் - தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு குறித்த கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலளித்துள்ளார்.

அண்ணாமலைக்கு அமைச்சர் காந்தி பதிலடி: மாநிலத்தில் உள்ள, பல ஐஏஎஸ் அலுவலர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், கைத்தறி இயக்குநர் பணியிட மாற்றத்தை மட்டும் திரித்து, அரசியல் உள்நோக்கத்துடன் தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை, முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி பதிலளித்துள்ளார்.

தைப்பூசத் திருவிழா கோலாகலம்: தைப்பூசத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை ஆன்மிக நகரான பழநியில் லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றினர். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருத்தணி உள்ளிட்ட அனைத்து முருகன் கோயில்களிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

காலக்கெடு விதித்து ஹமாஸுக்கு ட்ரம்ப் மிரட்டல்: “ஹமாஸ் இயக்கத்தினர் பிணைக் கைதிகளை இப்போது விடுவிப்போம், அப்போது விடுவிப்போம் எனக் கூறுகின்றனர். வரும் சனிக்கிழமை பகல் 12 மணிக்குள் பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால் இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்தாகும். சிறிது சிறிதாக அல்ல, பெரியளவில் தாக்குதல் நடத்தப்படும், மீண்டும் நரகத்தைச் சந்திக்க நேரிடும். எனினும், இது எனது தனிப்பட்ட கருத்து. இதனை இஸ்ரேல் நிராகரிக்கலாம்” என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தங்கம் விலை புதிய உச்சம்: ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து, ரூ. 8,060-க்கு விற்பனையானது. பவுனுக்கு ரூ.640 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.64,480 என்ற புதிய வரலாற்று உச்சத்துடன் விற்பனையானது.

சர்வதேச அளவில் தங்கத்தின் குறியீடு வலுவடைந்து வருகிறது. அத்துடன், அமெரிக்க டாலரும் ரூ.87.50 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை அதிகரித்துள்ளது. இவை தவிர, அமெரிக்க அதிபரின் பொருளாதாரக் கொள்கைகள், பங்குச் சந்தை சரிவு, ரியல் எஸ்டேட் சரிவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு உள்ளிட்டவையும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. வரும் நாட்களில் தங்கம் விலை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதே தவிர, குறைவதற்கான வாய்ப்பு கம்மியாக உள்ளது என்று வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

x