மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்: சோனியா காந்தி வலியுறுத்தல்


மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக மாநிலங்களவையில் நேற்று அவர் பேசியதாவது: ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது கடந்த 2013-ம் ஆண்டில் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் (என்எப்எஸ்ஏ) கொண்டு வரப்பட்டது. கடந்த 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் என்எப்எஸ்ஏ சட்டத்தின் கீழ் பயனாளிகள் பயன் பெற்று வருகின்றனர். கரோனா பெருந்தொற்று காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் பசியில் வாடுவதை என்எப்எஸ்ஏ சட்டம் தடுத்தது. இந்த சட்டத்தின்படியே தற்போது ரேஷனில் தனிநபருக்கு 5 கிலோ அரிசி அல்லது 5 கிலோ கோதுமை வழங்கப்படுகிறது.

கடந்த 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நாட்டின் மக்கள் தொகை 81.35 கோடி ஆகும். இதன் அடிப்படையில் என்எப்எஸ்ஏ சட்டத்தின் கீழ் கிராமங்களில் 75 சதவீதம் பேருக்கும், நகரங்களில் 50 சதவீதம் பேருக்கும் மானிய விலையில் உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன.

கடந்த 2021-ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் இதுவரை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. இதனால் தகுதியுள்ள சுமார் 14 கோடி பேர் என்எப்எஸ்ஏ சட்டத்தின் உரிமைகளை பெற முடியவில்லை. உணவு பாதுகாப்பு என்பது சலுகை கிடையாது. இது மக்களின் அடிப்படை உரிமை ஆகும். இதை கருத்தில் கொண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும். இவ்வாறு சோனியா காந்தி பேசினார்

x