பாஜக வசமான டெல்லி முதல் நாதக டெபாசிட் இழப்பு வரை - தேர்தல் முடிவுகள் ‘டாப் 10’ ஹைலைட்ஸ்


டெல்லியில் ஆட்சியைக் கைப்பற்றியது பாஜக: 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பாஜக. டெல்லியில் மொத்தமுள்ள தொகுதிகள் 70. ஆட்சியமைக்க 36 இடங்கள் தேவை எனும் நிலையில், 48 இடங்களைக் கைப்பற்றி பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில், வெறும் 22 தொகுதிகளை மட்டும் வசமாக்கிய ஆம் ஆத்மி ஆட்சியை இழக்கிறது. காங்கிரஸ் ஓரிடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

டெல்லியில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமுள்ள 7 தொகுதிகளில் ஆம் ஆத்மி 6 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது அரசியல் பார்வையாளர்களை கவனிக்க வைத்துள்ளது.

டெல்லியில் காங்கிரஸுக்கு ஹாட்ரிக் பூஜ்ஜியம்!: டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸுக்கு ஓரிடம்கூட கிடைக்கவில்லை. கடந்த 2020-ம் ஆண்டு தேர்தலிலும் காங்கிரஸ் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தற்போதைய டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலிலும் காங்கிரஸுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்கவில்லை. மூன்றாவது முறையாக அந்தக் கட்சிக்கு பூஜ்ஜியம் கிடைத்திருக்கிறது. அத்துடன், காங்கிரஸ் கட்சியின் பெரும்பாலான வேட்பாளர்கள் சொற்ப வாக்குகளையே பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

ஆம் ஆத்மி வீழ்ந்ததும், பாஜக எழுந்ததும் எப்படி?: டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததற்கு மதுபான கொள்கை ஊழல் விவகாரம், முதல்வர் இல்லத்தை ரூ.33 கோடியில் ஆடம்பர மாளிகையாக மாற்றியது, டெல்லியில் முக்கிய பிரச்சினையாக காற்று மாசு உருவெடுத்தது உள்ளிட்ட காரணங்களை அரசியல் நோக்கர்கள் முன்வைக்கின்றனர். அதேவேளையில், வாக்காளர்களுக்கு இரட்டை இன்ஜின் வளர்ச்சி வாக்குறுதியை அளித்தது, பெண்களுக்கு உதவித் தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது பாஜகவின் வெற்றிக்கு வித்திட்டதாக கூறப்படுகிறது.

அதிஷி வெற்றி... கேஜ்ரிவால் தோல்வி!: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் ஆதிஷி சிங் 3,521 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ஆம் ஆத்மி இம்முறை எதிர்க்கட்சியாகும் நிலையில், சட்டப்பேரவையில் அதிஷி முக்கியப் பங்கு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், முன்னாள் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா ஆகிய இருவரும் தோல்வி அடைந்தனர்.

“மக்கள் தீர்ப்பை பணிவுடன் ஏற்கிறோம்” - கேஜ்ரிவால்: தேர்தல் தோல்வி குறித்து ஆம் ஆத்மி கட்சி நிறுவனரும், முன்னாள் முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்ட வீடியோ பதிவில், “மக்களின் தீர்ப்பை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். பாஜகவின் வெற்றிக்கு வாழ்த்துகள். டெல்லி மக்களின் எதிர்பார்ப்புகளை பாஜக நிறைவேற்றும் என்று நம்புகிறேன். அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படும். நாங்கள் அதிகாரத்துக்காக அரசியலில் இல்லை. மாறாக, மக்களுக்கு சேவை செய்வதற்கான ஒரு தலமாகவே நாங்கள் அதிகாரத்தைக் கருதுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

“எதையும் விட்டுவிட மாட்டோம்!” - பிரதமர் மோடி: தேர்தல் முடிவுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், “டெல்லியின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வதற்கும், அதன் மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம். எதையும் விட்டுவிட மாட்டோம். இதுவே எங்கள் உத்தரவாதம். இதனுடன், வளர்ந்த இந்தியாவை உருவாக்குவதில் டெல்லி முக்கிய பங்கு வகிப்பதையும் நாங்கள் உறுதி செய்வோம்” என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் சொல்வது என்ன?: “இந்த தேர்தல் முடிவுகள், பிரதமரின் கொள்கைகளுக்கு ஆதரவானது அல்ல. மாறாக, இது அரவிந்த் கேஜ்ரிவாலின் வஞ்சகம், ஏமாற்றுதல் மற்றும் மிகைப்படுத்தப்பட்ட சாதனை பிரச்சார அரசியலை நிராகரிப்பதாகும். அரவிந்த் கேஜ்ரிவாலின் கீழ் நடந்த பல்வேறு மோசடிகளை முன்னிலைப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரஸ் முன்னிலை வகித்தது. மேலும், கேஜ்ரிவாலின் 12 ஆண்டு கால தவறான ஆட்சி குறித்து வாக்காளர்கள் தங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளனர்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

“இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்”: “இண்டியா கூட்டணி கட்டுக்கோப்பாக இல்லை. ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஒற்றுமையாக இந்தத் தேர்தலை சந்திக்கவில்லை. இண்டியா கூட்டணித் தலைவர்கள் இதுகுறித்து விரைவில் கலந்தாய்வு செய்ய வேண்டும். இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் ஈகோ பிரச்சினைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டு, நாட்டையும் மக்களையும் காப்பாற்றுகிற திசையில் சிந்திக்க வேண்டும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு மட்டுமல்ல, சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இண்டியா கூட்டணி ஒருங்கிணைந்து செயல்பட வேண்டிய தேவை உள்ளது” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

திமுக அமோக வெற்றி; நாதக டெபாசிட் இழப்பு!: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், மொத்தமுள்ள 20 சுற்றுகள் முடிவில், திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,15,709 வாக்குகள் பெற்று, 91,558 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றார். நாதக வேட்பாளர் உட்பட 45 பேரும் டெபாசிட் இழந்தனர். நோட்டாவில் 6,101 வாக்குகள் பதிவாகின.

திமுக, நாதக வேட்பாளர்கள் கருத்து: “ஈரோடு கிழக்கு தொகுதியில், முக்கிய எதிர்க்கட்சி போட்டியிடவில்லை. எனவே, திமுகவுக்கு எதிரான வாக்குகள், நாதகவுக்கு கிடைத்துள்ளன” என்று வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் கருத்து தெரிவித்துள்ளார்.

இதனிடையே, “நாம் தமிழர் கட்சிக்கு கிடைத்துள்ள வாக்குகள் ஒருபோதும் எதிர்காலத்தில் வேறு கட்சிக்கு போகாது. திமுகவுக்கு எதிரான வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு விழுந்துள்ளன. பெரியார் குறித்து சீமான் விமர்சனம் செய்ததால் வாக்குகள் குறையவில்லை” என்று ஈரோடு கிழக்கு தொகுதி நாதக வேட்பாளர் சீதாலட்சுமி கூறியுள்ளார்.

x