மத்திய பட்ஜெட் 2025-26: முழுமையான முக்கிய அம்சங்கள்


புதுடெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025-26-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் இன்று (பிப்.1) தாக்கல் செய்தார்.இதில், தனிநபர் வருமான உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தனிநபர் வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

நேரடி வரிகள்: தனிநபர் வருமான உச்சவரம்பு 12 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு. இதன்படி தனிநபர் வருமானம் 12 லட்சம் ரூபாய் வரை வருமான வரி இல்லை. (மொத்த வருமானம் கணக்கிடுவதில் சிறப்பு வரி விகிதத்துடன் கூடிய மூலதன லாபம் தவிர மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஒரு லட்சம் ரூபாய் வருமானம்) வரி செலுத்தும் சம்பளதாரர்களுக்கு இந்த உச்ச வரம்ப 12.75 லட்சம் வரை இருக்கும். இதில் நிலைக் கழிவாக ரூபாய் 75,000 கணக்கில் கொள்ளப்படும்.

நடுத்தர பிரிவினருக்கு வரி விகிதங்களைக் குறைக்கும் வகையில் புதிய வரி விகித கட்டமைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நடுத்தரப் பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு வீட்டு நுகர்வுக்கான பொருட்களை வாங்குவது, சேமிப்பு மற்றும் முதலீடுகளுக்கு செலவு செய்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

புதிய வருமான வரி சட்ட மசோதா வரி செலுத்துவோர் எளிதில் புரிந்து கொள்ளும் வகையிலும் வரி நிர்வாகத்தை திறம்பட மேற்கொள்ளும் வகையிலும், வரி தொடர்பான சர்ச்சைகளைக் குறைத்து வரி விகிதங்களை உறுதிப்படுத்தும் வகையிலும் தெளிவான பிரிவுகளுடன் வெளிப்படைத்தன்மையுடன் தாக்கல் செய்யப்படும்.நேரடி வரிகள் மூலம் ஒரு லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும்.

திருத்தியமைக்கப்பட்ட வரி விகித கட்டமைப்புகள்: புதிய வரி முறைகளின் கீழ், மாற்றியமைக்கப்பட்ட வரிவிகித கட்டமைப்பு பின்வருமாறு:

தனிநபர் வருமானம் ஆண்டு ஒன்றுக்கு, 12 லட்சம் ரூபாய் வரை வரி விதிப்பு எதுவும் இல்லை. 12 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலான தனிநபர் வருமானத்திற்கு (நிலைக்கழிவு 75,000 ரூபாய் கழித்த பிறகு) உள்ள வரிவிகிதங்கள் முறையே:

  • 4 லட்சம் ரூபாய் வரை - 0%
  • 4 முதல் 8 லட்சம் ரூபாய் வரை - 5%
  • 8 முதல் 12 லட்சம் ரூபாய் வரை - 10%
  • 12 முதல் 16 லட்சம் ரூபாய் வரை - 15%
  • 16 முதல் 20 லட்சம் ரூபாய் வரை - 20%
  • 20 முதல் 24 லட்சம் ரூபாய் வரை - 25 %
  • 24 லட்சம் ரூபாய்க்கும் மேல் - 30 %


வரிபிடித்த நடைமுறைகளில் உள்ள சிரமங்களை எளிதாக்கும் வகையில் ஆதார வரிபிடித்தம் (டிடிஎஸ்) / ஆதார வரி வசூல் (டிசிஎஸ்) முறைகளில் சீரமைப்பு நடவடிக்கைகள்:

  • வரிபிடித்தம் செய்யக் கூடிய வருவாய் இனங்களுக்கான உச்சவரம்பு தொகை மற்றும் வரி விகிதங்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையிலான சீரமைப்பு நடவடிக்கைகள்.
  • மூத்த குடிமக்களுக்கான வைப்புத் தொகைக்கு வழங்கப்படும் வட்டித் தொகைக்கான டிடிஎஸ் பிடித்த உச்சவரம்புத் தொகை 50,000 ரூபாயிலிருந்து ஒரு லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • வாடகை வருவாய் மீதான டிடிஎஸ் பிடித்த உச்சவரம்புத் தொகை ஆண்டு ஒன்றுக்கு 2.4 லட்சம் ரூபாயிலிருந்து 6 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்திய ரிசர்வ் வங்கியின் சுதந்திரமான பரிவர்த்தனை திட்டத்தின் கீழ் பணபரிவர்த்தனைக்கான ஆதார வரிபிடித்த உச்சவரம்பு 7 லட்சம் ரூபாயிலிருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
  • நிரந்தர கணக்கு எண் (பான்) இல்லாதவர்களுக்கு உயர் அளவான ஆதார வரி பிடித்தம் செய்யப்படும். ஆதார வரி வசூல் தொகையை தாமதமாக செலுத்துபவர்களுக்கு அது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்வதற்கான காலகெடு வரை குற்றமாகக் கருதப்பட மாட்டாது.

இணக்க நடைமுறைகளின் சுமைகளைக் குறைத்தல்: சிறிய அறக்கட்டளைகள், நிறுவனங்களுக்கான இணக்க நடைமுறைகளின் சுமையைக் குறைக்கும் வகையில், அறிக்கை தாக்கல் செய்வதில் அதன் பதிவு செய்த காலமான 5 ஆண்டுகளிலிருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

சொந்த வீட்டின் மீதான ஆண்டு மதிப்பு பூஜ்யமாக அறிவிப்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் எவ்வித நிபந்தனையின்றி இரண்டு வீடுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகம் புரிதலை எளிதாக்குதல்: சர்வதேச பரிவர்த்தனைகளில் விலை வரையறை குறித்து 3 ஆண்டு காலத்திற்குள் கண்டறிவதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச வரி விதிப்பில் உறுதித் தன்மையை வழங்கும் வகையிலும் வழக்குகளைக் குறைக்கும் வகையிலும், பாதுகாப்பான துறைமுக விதிகள் உருவாக்கம் செய்யப்படும்.

2024-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதிக்குப் பிறகு தனிநபரால் தேசிய சேமிப்புத் திட்டத்தின் கீழ் திரும்பப் பெறப்படும் தொகைகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த உச்சவரம்பின் அடிப்படையில் தேசிய ஓய்வூதியத்திட்டக் கணக்குகளின் மூத்த குடிமக்களுக்கான கணக்குகளுக்கும் ஒரே மாதிரியான நடைமுறைகள் பின்பற்றப்படும்.

பட்ஜெட் மதிப்பீடுகள் 2025-26 : மொத்த வருவாய் கடன்களைத் தவிர மற்றும் மொத்த செலவினங்களின் மதிப்பீடுகள் முறையே 34.96 லட்சம் கோடி & 50.65 லட்சம் கோடி ரூபாயாகும். நிகர வரிவருவாய் மதிப்பீடு 28.37 லட்சம் கோடி ரூபாய் நிதிப்பற்றாக்குறை மதிப்பீடு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 4.4 சதவீதம் சந்தைக் கடன்களுக்கான மொத்த மதிப்பீடு 14.82 லட்சம் கோடி ரூபாய். 2025-26-ம் நிதியாண்டுக்கான மூலதனச் செலவினங்கள் 11.21 லட்சம் கோடி ரூபாய் (உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 3.1 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் வளம் மற்றும் உணவு தானிய வேளாண் திட்டம்) – வேளாண் மாவட்ட மேம்பாடு: வேளாண் துறையில் திறன் மேம்பாடு, முதலீடு, தொழில்நுட்பம், கிராமப்புற பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் மாநிலங்களுடன் இணைந்து பல்துறை விரிவான வேளாண் திட்டம் தொடங்கப்படும். முதல் கட்டமாக 100 மாவட்டங்களில் வேளாண் மேம்பாட்டுத் திட்டம் தொடங்கப்படும்.

பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு: துவரம்பருப்பு, உளுத்தம் பருப்பு மற்றும் மசூர் பருப்பு ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் பருப்பு உற்பத்திக்கான தன்னிறைவு இயக்கத்தை மத்திய அரசு 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்த உள்ளது.தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைக்கான கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் இந்த பருப்பு வகைகள் கொள்முதல் விவசாயிகளிடமிருந்து அடுத்த 4 ஆண்டுகளுக்கு கொள்முதல் செய்யப்படும்.

காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான விரிவான திட்டம்: காய்கறிகள் மற்றும் பழவகைகள் உற்பத்தி, சீரான விநியோகம், பதப்படுத்துதல், விவசாயிகளுக்கு வருவாயை அதிகரிக்கும் வகையில் விலை கிடைக்கச் செய்தல் போன்ற அம்சங்களை கருத்தில் கொண்டு மாநிலங்களுடன் இணைந்து விரிவான திட்டம் செயல்படுத்தப்படும்.

பிஹாரில் தாமரைப் பொரி உற்பத்தி வாரியம்: தாமரைப் பொரியின் உற்பத்தி, பதப்படுத்துதல், மதிப்புக் கூட்டுதல், சந்தைப்படுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேம்படுத்தும் வகையில் தாமரைப் பொரி உற்பத்தி வாரியம் அமைக்கப்படும்.

அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கம்: அதிக விளைச்சல் தரக்கூடிய விதைகள் மேம்பாடு, வர்த்தக ரீதியில் 100-க்கும் அதிகமான வகைகளில் விதைகள் கிடைக்கச் செய்வது, சுற்றுச்சூழல் ஆராய்ச்சிகளை வலுப்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு அதிக மகசூல் தரும் விதைகளுக்கான தேசிய இயக்கம் தொடங்கப்படும்.

மீன்வளம்: ஆழ்கடல் மற்றும் பிரத்யேக இந்தியப் பொருளாதார மண்டலங்களில் மீன்பிடிப்புத் தொழிலை நிலைப்படுத்தும் வகையிலான கட்டமைப்பை மத்திய அரசு கொண்டுவர உள்ளது. இதில் அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளில் உள்ள கடல்பகுதிகளுக்கு சிறப்புக் கவனம் செலுத்தப்படும்.

பருத்தி உற்பத்திக்கான இயக்கம்: பருத்தி விவசாயத்தை மேம்படுத்தும் வகையிலும், நீண்டகால பருத்தி வகைகளுக்கு உத்வேகம் அளிக்கும் வகையிலும் அதன் உற்பத்தியை குறிப்பிடத்தக்க மேம்படுத்துவதற்கான 5 ஆண்டுகால இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வேளாண் அடையாள அட்டைகள் மூலம் கடனுதவி விரிவாக்கம்: வேளாண் கடன் அட்டைகள் மூலம் பெறப்படும் கடன் தொகை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தும் வகையில் திருத்தியமைக்கப்பட்ட வட்டி மானிய விகிதத்தின் கீழ், கடன்களுக்கான உச்சவரம்பு நிர்ணயிக்கப்படும்.

அசாமில் யூரியா உற்பத்தித் தொழிற்சாலை: அசாம் மாநிலம் நம்ருப்பில் ஆண்டு ஒன்றுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தித் திறன் கொண்ட உர ஆலை நிறுவப்படும்.

குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வகைப்பாடுகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட வரையறைகள்: அனைத்து குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வகைப்படுத்தலுக்கான முதலீடு மற்றும் விற்பனை உச்சவரம்பு, முறையே இரண்டரை மற்றும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறு நிறுவனங்களுக்கான கடன் அட்டைகள்: உதயம் இணையதளம் வாயிலாக பதிவு செய்துள்ள குறு தொழில் நிறுவனங்களுக்கான பிரத்யேக கடன் அட்டைகளின் உச்ச வரம்ப ஐந்து லட்சம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி முதல் ஆண்டில், பத்து லட்சம் கடன் அட்டைகள் வெளியிடப்படும்.

புத்தொழில் நிறுவனங்களின் நிதியுதவிக்கான நிதியம்: புதிய நிதியுதவிக்கான நிதியத்தை உருவாக்கும் வகையில் 10,000 கோடி ரூபாய் பங்களிப்புடன் இந்த நிதியம் உருவாக்கப்படும்.

முதல் முறை தொழில் முனைவோருக்கான திட்டங்கள்: அடுத்த 5 ஆண்டுகளுக்கு, 5 லட்சம் பெண்கள், ஷெட்யூல்டு வகுப்பினர், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த முதல் முறை தொழில் முனைவோருக்கு 2 கோடி ரூபாய் வரை நீண்டகால கடனுதவி வழங்கும் புதிய திட்டம் அறிவிப்பு.

காலணிகள் மற்றும் தோல் துறை உற்பத்திக்கான திட்டங்கள்: நாட்டின் காலணிகள் மற்றும் தோல் துறையின் உற்பத்தி, தரம் மற்றும் போட்டித் தன்மையை மேம்படுத்தும் வகையிலும் 22 லட்சம் நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையிலும் 4 லட்சம் கோடி ரூபாய் விற்பனை வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், 1.1 லட்சம் கோடி ரூபாய்க்கும் கூடுதல் மதிப்பிலான ஏற்றுமதி வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும் திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.

பொம்மை உற்பத்தித் துறைக்கான அளவீடுகள்: பொம்மை உற்பத்தியில் இந்தியாவை உலகின் மையமாக உருவெடுக்கச் செய்யும் வகையில், உயர் தரத்திலான தனித்துவம் மிக்க நீடித்த தன்மையுடன் கூடிய புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பதப்படுத்துதல் தொழிலுக்கான ஆதரவு: பிஹாரில் உணவு தொழில்நுட்ப, தொழில்முனைவு மற்றும் மேலாண்மைக்கான தேசிய நிறுவனம் ஏற்படுத்தப்படும்.

உற்பத்திக்கான இந்தியா திட்டத்தை மேம்படுத்துவதற்கான உற்பத்தி இயக்கம்: உற்பத்திக்கான இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் வகையில், சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்களை உள்ளடக்கிய தேசிய உற்பத்தி இயக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலீடுகள் – மேம்பாட்டிற்கான 3-வது ஊக்கி > ஊட்டச்சத்து உணவு ஆதரவு நடவடிக்கைகளுக்கான செலவுகள் குறித்த விதிமுறைகள்.

அடல் சிந்தனை ஆய்வகம்: அடுத்த 5 ஆண்டுகளில் அரசு பள்ளிகளில் 50,000 அடல் சிந்தனை ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.

அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் ஆரம்ப சுகாதார மையங்களில் அகண்ட அலைவரிசைக்கான இணைப்பை உருவாக்குதல்: பாரத் நெட் திட்டத்தின் கீழ், கிராமப்புறப் பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அனைத்து அரசு மேல் நிலைப் பள்ளிகளில் அகண்ட அலைவரிசைக்கான இணைப்புகள் ஏற்படுத்தப்படும்.

இந்திய மொழிப் புத்தகத் திட்டம்: பள்ளிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களுக்கான டிஜிட்டல் வடிவிலான இந்திய மொழிகளில் புத்தகங்கள் வழங்கும் வகையில் இந்திய மொழிப் புத்தகத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திறன் மேம்பாட்டிற்கான சீர்மிகு தேசிய மையம்: இந்தியாவில் உற்பத்தி செய்வோம் திட்டத்திற்குத் தேவையான இளைஞர்களின் திறன் மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில் சர்வதேச நிபுணர்கள் மற்றும் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் 5 திறன் மேம்பாட்டிற்கான சீர்மிகு தேசிய மையங்கள் ஏற்படுத்தப்படும். இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் விரிவாக்கம் செய்யப்படும்.

2014-ம் ஆண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்ட 5 இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் 6,500-க்கும் அதிகமான மாணவர் சேர்க்கைக்கான இடங்களை அதிகரிக்கும் வகையில், கூடுதல் உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படும்.

கல்விக்கான செயற்கை தொழில்நுட்பத்துடன் கூடிய சீர்மிகு மையங்கள்: கல்விக்கான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் சீர்மிகு மையங்கள் அமைக்கப்படும். மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் விரிவுபடுத்தப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 இடங்களை சேர்க்கும் வகையில், அடுத்த ஆண்டு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகளில் கூடுதல் 10,000 இடங்கள் உருவாக்கப்படும்.

அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் பகல்நேர புற்றுநோய் பராமரிப்பு மையங்கள்: அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளில் பகல் நேர புற்றுநோய் பராமரிப்பு மையங்களை உருவாக்கும் வகையில், 2025-26-ம் நிதியாண்டில் 200 மையங்களை அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நகர்ப்புற வாழ்வியல் முறைகளை வலுப்படுத்துதல்: நகர்ப்புற தொழிலாளர்களின் சமூகப் பொருளாதாரத்தை மேம்படுத்த உதவிடும் வகையில், அவர்களது வருவாய் மற்றும் நீடித்த வாழ்வாதாரத்திற்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் சாலையோர வியாபாரிகளுக்கான கடனுதவித் திட்டம்: இத்திட்டம் வங்கிகளிடமிருந்து கடனுதவி பெறுவதுடன் ஒருங்கிணைந்த கட்டண நடைமுறை அமைப்புடன் இணைக்கப்பட்ட 30,000 ரூபாய் உச்சவரம்புடன் கூடிய கடன் அட்டைகளை வழங்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படும்.

இணையதளம் வாயிலாக பணி புரியும் தொழிலாளர்கள் நலன்களுக்கான சமூகப் பாதுகாப்புத் திட்டம்: அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஷ்ரம் இணையதளம் வாயிலாக பதிவு செய்வதற்கும் அடையாள அட்டைகள் வழங்கவும். பிரதமரின் மக்கள் சுகாதாரத் திட்டத்தின் கீழ் சுகாதார சேவைகள் வழங்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.

பொருளாதார முதலீடுகள்: > உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் பொதுத்துறை தனியார் கூட்டமைப்பு

  • பொதுத்துறை - தனியார் துறை கூட்டமைப்பில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான அமைச்சகங்களின் 3 ஆண்டுகால செயல் திட்டங்களை வகுக்க மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும்.
  • உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் மாநிலங்களுக்கு ஆதரவு
  • மூலதன செலவின ங்கள் மற்றும் மறுசீரமைப்பிற்கான ஊக்கத்தொகை வழங்கும் வகையில் மாநிலங்களுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் வட்டியில்லா 50 ஆண்டுகால கடனுதவி வழங்கப்படும்.

சொத்துப் பணமாக்கல் திட்டம் 2025-30 - புதிய திட்டங்களில் 10 லட்சம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகளை திரும்பப் பெறும் வகையில், 2025 முதல் 2030-ம் ஆண்டு வரை 2-வது திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்படும்.

ஜல்ஜீவன் இயக்கம்: கூடுதல் நிதி ஒதுக்கீட்டுடன் 2028-ம் ஆண்டு வரை இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படடடுள்ளது.

நகர்ப்புற சவால்களுக்கான நிதியம்: நகர்ப்புறங்களை வளர்ச்சிக்கான மையங்களாக உருவாக்கும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு ஏதுவாக ஒருகோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் நகர்ப்புற சவால்கள் நிதியம் அமைக்கப்படும். இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புறங்களில் மறு மேம்பாட்டு உருவாக்கம், குடிநீர் மற்றும் துப்புரவு பணிகளை மேற்கொள்ளும் வகையில் 2025-26-ம் நிதியாண்டில் 10,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான அணு எரிசக்தி இயக்கம்: அணு எரிசக்திச் சட்டம் மற்றும் அணு உலைகளால் ஏற்படும் சேதங்களுக்கான உரிமைத் தொகைப் பொறுப்புகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும். 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டுடன் சிறிய அளவிலான அணு உலைகளின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான அணு எரிசக்தி இயக்கம் ஏற்படுத்தப்படும். 2030-ம் ஆண்டில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட 5 சிறிய அளவிலான அணு உலைகள் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.

கப்பல் கட்டுமானம்: கப்பல் கட்டுமானத்திற்கான நிதியுதவிக் கொள்கைகள் மாற்றியமைக்கப்படும்.சீரமைக்கப்பட்ட உள்கட்டமைப்புத் திட்டப் பட்டியலை உள்ளடக்கிய பிரத்யேக வடிவிரலான பெரிய கப்பல்கட்டுமானங்களை மேற்கொள்வது.

கடல்சார் மேம்பாட்டு நிதியம்: 25,000 கோடி ரூபாய் மூலதன நிதியுடன் கடல்சார் மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும். இதில் 49 சதவீதம் மத்திய அரசின் பங்களிப்பாகவும், எஞ்சிய 51 சதவீதம் துறைமுகங்கள் மற்றும் தனியார் பங்களிப்பாகவும் இருக்கும்

உடான் – மண்டல இணைப்புத் திட்டம்: திருத்தியமைக்கப்பட்ட உடான் திட்டத்தின் கீழ், அடுத்த 10 ஆண்டுகளில் 4 கோடி விமானப் பயணிகளைக் கையாளும் திறன் கொண்ட 120 புதிய விமான நிலையங்களுக்கான மண்டல இணைப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மலைப்பாங்கான பகுதிகள் முன்னேற விரும்பும் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள மாவட்டங்களில் சிறிய அளவிலான விமான நிலையங்கள் மற்றும் ஹெலிகாப்டர் இறங்குதளம் அமைக்க ஆதரவு.

பிஹாரில் பசுமை விமான நிலையம்: பிஹார் பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக பாட்னா விமான நிலைய விரிவாக்கம் மற்றும் பிஹ்டாவில் விமான நிலையம் மேம்பாடு ஆகியவை மேற்கொள்ளப்படும்.

மிதிலாஞ்சலில் மேற்கு கொசி கால்வாய் திட்டம்: பிஹாரில் நிறுவன இடம் மேலாண்மை திட்டத்தின் கீழ் மேற்கு கொசி கால்வாய் அமைப்பதற்கு நிதியுதவி வழங்கப்படும்.

சுரங்கத்துறை மறு சீரமைப்பு நடவடிக்கைகள்: குறைந்து வரும் முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்களைப் பாதுகாக்கும் வகையில் அதனை மீட்டெடுப்பதற்கான கொள்கைகள் வகுக்கப்படும்.

குறைந்த மற்றும் நடுத்தர வகுப்பினருக்கு வீட்டு வசதிக்கான சிறப்பு சாளர நிதியம் 2 - அரசு, வங்கிகள், தனியார்துறை பங்களிப்புடன் மேலும் ஒரு லட்சம் குடியிருப்பு வீடுகளை விரைந்து கட்டி முடிக்கும் நோக்கில் 15,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பை அடிப்படையாகக் கொண்ட சுற்றுலாத்துறை வளர்ச்சி - மாநில அரசுகளின் ஒத்துழைப்புடன் நாடு முழுவதிலும் உள்ள 50 முக்கிய சுற்றுலா தலங்கள் சவால் அடிப்படையில் மேம்படுத்தப்படும்.

புதிய கண்டுபிடிப்புகளுக்கான முதலீடு > ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள்: கடந்த ஜூலை மாதம் இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதிய கண்டுபிடிப்புகள். தனியார் துறையின் பங்களிப்புடன் கூடிய திட்டத்தை அமல்படுத்துவதற்கான 20,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அறிவியல் அடிப்படையிலான நவீன தொழில்நுட்பத்திற்கான நிதி ஒதுக்கீடுகள்: அடுத்த தலைமுறை புத்தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்கும் வகையில் நவீன தொழில்நுட்பத்திற்கான நிதி ஒதுக்கீடுகள்

பிரதமரின் ஆராய்ச்சி படிப்புகளுக்கான நிதி ஒதுக்கீடு: இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள், இந்திய அறிவியல் நிறுவனங்களின் தொழில்நுட்பம் சார்ந்த 10,000 ஆராய்ச்சி மேற்படிப்புகளுக்கான நிதியுதவி மேம்பாட்டுத் திட்டம்.

மரபணு மாற்ற பயிர்களுக்கான மரபணு வங்கிகள்: எதிர்காலத்திற்குத் தேவையான உணவு, தானியங்கள் மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 10 லட்சம் மரபணு அடிப்படையிலான 2-வது மரபணு வங்கி அமைக்கப்படும்.

தேசிய புவிசார் இயக்கம்: அடிப்படை புவிசார் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தரவுகளை மேம்படுத்தும் வகையில் தேசிய புவிசார் இயக்கம் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிவுசார் இந்தியா இயக்கம்: பாரம்பரிய கையெழுத்துப் பிரதிகள் குறித்த ஆய்வுகள் ஆவணப்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் நடவடிக்கைகளுக்கான கல்வி நிறுவனங்கள், அருங்காட்சியகங்கள், நூலகங்கள், தனிநபர் சேகரிப்பாளர்கள் ஆகியோரின் உதவியுடன் ஒரு கோடிக்கும் அதிகமான கையெழுத்துப் பிரதிகள் அறிவுசார் இந்தியா இயக்கத்தின் கீழ் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதிகள் – வளர்ச்சி > ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம்: துறை வாரியான மற்றும் அமைச்சகங்களின் இலக்குடன் வர்த்தகம், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன அமைச்சகம் மற்றும் நிதி அமைச்சகம் ஆகியவை இணைந்து ஏற்றுமதி ஊக்குவிப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.

பாரத் வர்த்தக வலை அமைப்பு: சர்வதேச வர்த்தகத்திற்கான ஆவணங்கள் மற்றும் நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒருங்கிணைந்த தளமாக பாரத் வர்த்தக வலை அமைப்பு உருவாக்கப்படும்

சர்வதேச திறன் மையங்களுக்கான தேசிய கட்டமைப்பு: வளர்ந்து வரும் 2-ம் நிலை நகரங்களில், சர்வதேச திறன் மையங்களை ஊக்குவிக்கும் வகையில் மாநிலங்களுக்கான தேசிய கட்டமைப்பு வழிகாட்டுதல் நெறிமுறைகள் வகுக்கப்படும்.

சீர்திருத்த நடவடிக்கைகள் : நிதித்துறை சீர்திருத்தங்கள் மேம்பாடு > காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீடு: காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான உச்சவரம்பு 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் காப்பீட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் முதலீட்டை இந்தியாவில் மேற்கொள்ள முடியும்.நிதிசார், உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கியால் வழங்கப்படும் கடன் வசதிகள் மேம்படுத்தப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு ஏதுவாக நிறுவனங்களின் கடன் பத்திரங்கள் மீதான பகுதி அளவு கடன் வசதி மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு நிதிசார் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான தேசிய வங்கிகள் மூலம் ஏற்பாடு செய்யப்படும்.

கிராமப்புற கடன் மதிப்பீடு: கிராமப்புறப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் சுயஉதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு கடனுதவிகள் வழங்கும் வகையில் பொதுத்துறை வங்கிகள் கிராமப்புற கடன் மேம்பாடு தொடர்பான கட்டமைப்புகள் மேம்படுத்தப்படும்.

ஓய்வூதியத்துறை: ஓய்வூதியம் சார்ந்த செயல்பாடுகளில் ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு ஒழுங்குமுறை அமைப்பு உருவாக்கப்படும்.

மறு சீரமைப்பு ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கான உயர்நிலைக் குழு: அனைத்துவிதமான நிதித்துறை சாராத கட்டுப்பாடுகள் சான்றிழ்கள் உரிமங்கள் மற்றும் அனுமதிகள் வழங்குவதை ஆய்வு செய்யும் வகையில் மறுசீரமைப்பு ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கான உயர்நிலைக்குழு அமைக்கப்படும்.

மாநிலங்களின் முதலீடுகளுக்கான குறியீடுகள்: 2025-ம் ஆண்டில் கூட்டுறவு கூட்டாட்சியின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில், முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்களுக்கான குறியீடுகள் வழங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்படும்.

மக்கள் நம்பிக்கை மசோதா 2.0 - பல்வேறு சட்டங்களில் குற்றமாககக் கருதப்படும் 100-க்கும் அதிகமான பிரிவுகளை திருத்தியமைக்கும் மக்கள் நம்பிக்கை மசோதா 2.0 கொண்டுவரப்படும்.

வேலைவாய்ப்பு மற்றும் முதலீடு > மின்னணு சாதன உற்பத்தித் திட்டங்களுக்கான வரி விதிப்புகள்: இந்தியாவில் உள்ள மின்னணு சாதன உற்பத்தி நிறுவனங்களுக்கு சேவைகளை வழங்கும் குடியுரிமை இல்லாத நிறுவனங்களுக்கு முன்கூட்டிக் கணிக்கப்பட்ட வரிவிதிப்பு நடைமுறைகள் பொருந்தும். பிரத்யேக மின்னணு சாதன உற்பத்தி அலகுகளுக்கு விநியோகிக்கப்படும் உதிரிப் பாகங்களை கிடங்குகளில் சேமித்து வைக்கும் கிடங்குகளில் வெளிநாட்டவர்களுக்கான வரி விதிப்பை உறுதி செய்யும் வகையில் பாதுகாப்பான துறைமுகத் திட்டம் அறிமுகம் செய்யப்டும்.

உள்நாட்டு கப்பல் போக்குவரத்துக்கான எடை அடிப்படையிலான வரி விதிப்புத் திட்டம்: ஏற்கனவே நடைமுறையில் உள்ள உள்நாட்டுக் கப்பல் போக்குவரத்துக்கான எடை அடிப்படையிலான வரி விதிப்புத் திட்டம் இந்திய கப்பல் சட்டம் 2021-ன் படி பதிவு செய்யப்பட்டள்ள உள்நாட்டுக் கப்பல்களுக்கும் நீட்டிக்கப்படும். இது நாட்டின் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை ஊக்குவிக்கும்.

புத்தொழில் நிறுவனங்களுக்கான பதிவு காலங்கள் நீட்டிக்கப்படும்: 01.04.2030-ம் தேதிக்கு முன்னர் பதிவு செய்யப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு அதன் பதிவுக் காலம் 5 ஆண்டுகள் வரை நீட்டிக்க அனுமதிக்கப்படும்.

மாற்றுமுறை முதலீட்டு நிதி - உள்கட்டமைப்பு மற்றும் அது சார்ந்த பிற துறைகளில் மேற்கொள்ளப்படும் வகைப்பாடு 1 மற்றும் வகைப்பாடு 2 ஆகியவற்றின் முதலீடுகளுக்கு மாற்றுமுறை முதலீட்டு நிதித் திட்டத்தின் கீழ், பங்கு பத்திரங்களிலிருந்து பெறப்படும் லாபத் தொகைக்கு வரி விதிப்பு உறுதி செய்யப்படும்.

தங்கப்பத்திரங்கள் மற்றும் ஓய்வூதிய நிதிக்கான முதலீட்டுத் தேதிகள் நீட்டிப்பு: 5 ஆண்டுகளுக்கும் கூடுதலான தங்கப்பத்திர சொத்து நிதி மற்றும் ஓய்வூதிய நிதியில் முதலீடு செய்வதற்கான கால அவகாசம் 2030-ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உள்கட்டமைப்புத் துறையில் முதலீடுகள் ஊக்குவிக்கப்படும்.

மறைமுக வரிகள்: தொழிற்சாலை சரக்குகளுக்கான சுங்க வரிவிதிப்பு முறைகளில் மாற்றங்கள்

2025-26-ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட அம்சங்கள்:

  • 7 விதமான வரி விகிதங்கள் நீக்கப்பட்டுள்ளன. இது 2023-24-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நீக்கப்பட்ட 7 வரி விகிதங்கள் தவிர மேலும் 7 வரி விகிதங்கள் நீக்கப்பட்டன. இதனையடுத்து பூஜ்ய வரி விகிதம் உட்பட மொத்தம் 8 வகையான வரி விகிதங்களே எஞ்சியுள்ளன.
  • ஒரு சில பொருட்களைத் தவிர மற்ற பொருட்களுக்கான சுங்க வரித் தீர்வைகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில், அது சார்ந்த சில பொருட்களுக்கான தீர்வைகளும் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளன.
  • ஒன்றுக்கும் மேற்பட்ட சுங்கத் தீர்வு அல்லது கூடுதல் கட்டணம் விதிக்கக் கூடாது. இதன் மூலம் சமூக நலக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் இனங்களுக்கு சுங்கத்தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மறைமுக வரிகள் மூலம் கிடைக்கும் 2,600 கோடி ரூபாய் வருவாய் இழப்பு

மருந்துப் பொருட்களுக்கு இறக்குமதி வரியிலிருந்து நிவாரணம்: உயிர் காக்கும் 36 வகையான மருந்துப் பொருட்களுக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உயிர் காக்கும் 6 வகையான மருந்துகளுக்கான சுங்கத் தீர்வை 5 சதவீதமாகக் குறைக்கப்படும். சில பிரத்யேக மருந்துப் பொருட்களுக்கு மருந்து உற்பத்தி நிறுவனங்களால் மேற்கொள்ளப்படும் நோயாளிகள் உதவித் திட்டத்தின் கீழ் அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். 37-க்கும் அதிகமான மருந்துகளுடன் கூடுதலாக புதிய 13 வகையான நோயாளிகள் மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் இந்த வரி விலக்கு பொருந்தும்.

உள்நாட்டு உற்பத்தி மற்றும் மதிப்புக் கூட்டலுக்கு ஆதரவு > முக்கியத்துவம் வாய்ந்த கனிம வளங்கள்: பவுடர் வடிவிலான கோபால்ட் உலோகம் மற்றும் கழிவுகள் : பயன்பாடற்ற லித்தியம் அயன், மின்கலன்கள், ஈயம், துத்தநாகம் மற்றும் 12-க்கும் கூடுதலான முக்கிய கனிம வளத்தாதுக்களின் இறக்குமதிக்கு அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படுகிறது.

ஜவுளித்துறை: தறிகளில் பயன்படுத்தப்படாத 2 வகையான ஜவுளி எந்திரங்களுக்கு முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பின்னல் ஆடைகளுக்கான திருத்தியமைக்கப்பட்ட அடிப்படை சுங்கத் தீர்வை விகிதம் 10% அல்லது 20% லிருந்து, 20% அல்லது கிலோ ஒன்றுக்கு 115 ரூபாய் இதில் அதிகமான வரி விகிதம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மின்னணு சாதனங்கள்:

  • தொடு திரை கொண்ட பெரிய அளவிலான காட்சித் திரைகளுக்கான அடிப்படை சுங்கத் தீர்வை 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • பயன்படுத்துவதற்கு தயாராக உள்ள மின்னணு சாதனங்கள் மற்றும் பிற உதிரிப் பாக ங்களுக்கான அடிப்படை சுங்கத் தீர்வை 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.
  • பயன்படுத்துவதற்கு தயாராக உள்ள மின்னணு சாதனங்களுக்கான உதிரிப் பாகங்களுக்கான அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

லித்தியம், அயன் மின்கலன்: மின்சார வாகனங்களுக்கான மின்கலன் உற்பத்திக்குத் தேவைப்படும் 35 வகையான கூடுதல் முதலீட்டு சரக்குகளுக்கும், மொபைல் சாதனங்களுக்கான மின்கலன் உற்பத்திக்குத் தேவைப்படும் 28 வகையான கூடுதல் முதலீட்டு சரக்குகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கப்பல் துறை: கப்பல் கட்டுமானத்திற்குத் தேவையான மூலப் பொருட்கள், உதிரிப் பாகங்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடிய பாகங்களுக்க அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து மேலும் 10 ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கப்பல்களை உடைக்கும் தொழிலுக்கும் இந்த வரி விலக்கு தொடரும்

தொலைத் தொடர்புத்துறை: தரவுகளுக்கான தரத்தில் உள்ள வலைதள சுவிட்சுகளுக்கு அடிப்படை சுங்கத்தீர்வை 20 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி ஊக்குவிப்பு > கைவினைப் பொருட்கள்: கைவினைப் பொருட்களின் ஏற்றுமதிக்கான கால அவகாசம் 6 மாதத்திலிருந்து ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் பட்சத்தில் மேலும் 3 மாதங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்கப்படும். சுங்கத்தீர்வை இல்லாத இடுபொருட்களுக்கான பட்டியலில் மேலும் 9 பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

தோல்துறை: ஈரப்பதத்துடன் கூடிய நீலநிற தோல்களுக்கான அடிப்படை சுங்கத் தீர்வையிலிருந்து முழு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தோலால் செய்யப்படும் கைவினைப் பொருட்களுக்கு ஏற்றுமதி தீர்வையிலிருந்து 20 சதவீதம் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடல்சார் பொருட்கள்: உறைய வைக்கப்பட்ட அரைத்த மீன் உணவு உற்பத்தி மற்றும் அது சார்ந்த ஏற்றுமதிக்கான அடிப்படை சுங்கத்தீர்வை 30 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.மீன் மூலக்கூறு உற்பத்தி மற்றும் இறால் உணவு ஆகியவற்றுக்கான அடிப்படை சுங்கத்தீர்வை 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

ரயில்வே சரக்குகளுக்கான உள்நாட்டு பராமரிப்பு, பழுது நீக்கம் , செயல்பாடுகள்: ரயில்வே துறையில் பராமரிப்பு, பழுது பார்த்தல், செயலாக்கம், ஆகிய சேவைகள், பயனடையும் வகையில், அதே போன்று விமானங்கள் மற்றும் கப்பல்களுக்கான சேவைகளில் பழுது நீக்கத்திற்கான பொருட்களை இறக்குமதி செய்வதற்கும் வகை செய்யப்பட்டுள்ளது. இத்தகைய பொருட்களின் ஏற்றுமதிக்கான கால அவகாசம் 6 மாதத்திலிருந்து ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மேலும் ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்கப்படும்.

வர்த்தக வசதிகள் > தற்காலிக மதிப்பீட்டிற்கான கால வரம்பு: தற்காலிக மதிப்பீடுகளை இறுதி செய்யும் வகையில் அதற்கான கால அவகாசம் 2 ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மேலும் ஒரு ஆண்டுகாலத்திற்கு நீட்டிக்கப்படும்

தன்னார்வ இணக்க நடைமுறைகள்: ஏற்றுமதி மற்றும் இறக்குமதியாளர்கள் பயனடையும் வகையில் சுங்கச் சாவடிகளிலிருந்து சரக்குகளை பெறுவதற்கு அது தொடர்பான விவரங்களை தன்னிச்சையாக வெளியிடுவதற்கும் சுங்கவரியை வட்டியுடன் அபராதமின்றி செலுத்துவதற்குமான புதிய சட்ட விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இறுதிக்கட்ட பயன்பாட்டிற்கான நீட்டிக்கப்பட்ட கால வரையறை: இறக்குமதி செய்யப்படும் இடுபொருள்களின் இறுதிக் கட்டப் பயன்பாட்டுக்கான கால வரையறையை 6 மாதங்கள் முதல் ஒரு வருடம் வரை நீட்டிப்பது தொடர்பான விதிமுறைகள் வகுக்கப்படும். இத்தகைய சரக்குகளை இறக்குமதி செய்பவர்கள் மாதந்தோறும் தாக்கல் செய்யும் அறிக்கைகளுக்குப் பதிலாக 3 மாதங்களுக்கு ஒரு முறை அறிக்கை தாக்கல் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

x