காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்வு: பட்ஜெட் அறிவிப்பு


புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார். இதில் காப்பீட்டுத் துறையில் அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்களவையில் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில், செயற்கை நுண்ணறிவை கல்வியில் ஊக்குவிக்கும் வகையில் ரூ.500 கோடி முதலீட்டில் ஒரு மையம் உருவாக்கப்படும். அடுத்த 5 ஆண்டுகளில் 50 ஆயிரம் ‘அடல் ஆய்வகங்கள்’ அரசுப் பள்ளிகளில் உருவாக்கப்படும்.

5 தேசிய திறன் மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
காப்பீட்டுத் துறைகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக்கான வரம்பு 100 சதவீதமாக உயர்த்தப்படுகிறது. ‘இந்தியாவின் குணமாகுங்கள்’ ஹீல் இன் இந்தியா (Heal in India) பிரச்சாரம் முன்னெடுக்கப்படும்.

பொருள் விநியோகம் செய்யும் டெலிவரி பணியில் உள்ள ஊழியர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்கப்படும். அவர்களுக்கு காப்பீடு வழங்கப்படும்.
அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் அடுத்த மூன்றாண்டுகளில் புற்றுநோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் ’டே-கேர் கேன்சர் மையங்கள்’ அமைக்கப்படும். இவற்றில் 200 மையங்களில் 2025 - 26 ஆண்டிலேயே அமைக்கப்படும்.இவ்வாறாக நிதியமைச்சர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார்.

காலணி மற்றும் தோல் துறையைப் பொருத்தவரையில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். இதன் மூலம் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
பொம்மை உற்பத்தித் துறையில் இந்தியாவை அந்தச் சந்தைக்கான சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.

x