புதுடெல்லி: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் 2025-26-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார்.
இதைத் தொடர்ந்து மக்களவையில் இன்று (பிப்.1) காலை 11 மணிக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து 8-வது முறையாக அவர் பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்ற இருக்கிறார். நாடாளுமன்ற அலுவல்களை ஒளிபரப்பும் சன்சத் தொலைக்காட்சியில் பட்ஜெட் தாக்கல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக நிதி அமைச்சகத்தின் வெளியே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் அதிகாரிகள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இந்நிலையில்,பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இதனைத் தொடர்ந்து நிதியமைச்சர் நாடாளுமன்றம் சென்றடைந்தார். தொடர்ந்து அங்கு பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் பட்ஜெட் 2025-26-க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மரபு ரீதியிலான நடைமுறைகள் அனைத்தும் முடிவுற்ற நிலையில் பட்ஜெட் காலை 11 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது.