புதுடெல்லி: அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் அருகே பயணிகள் விமானமும், ராணுவ ஹெலிகாப்டரும் நடுவானில் மோதி ஆற்றில் விழுந்த விபத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
நேற்று அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் 64 பேருடன் சென்ற அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் பயணிகள் விமானம், அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டருடன் நடுவானில் மோதி, வாஷிங்டனின் போடோமேக் ஆற்றுக்குள் விழுந்தது.
இந்த விபத்தில், விமானம் மற்றும் ஹெலிகாப்டரில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை, சுமார் 30 பேரின் உடல்கள், விமானம் விழுந்த போடோமேக் ஆற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் சிக்கிய அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் 60 பயணிகள் மற்றும் 4 விமான பணியாளர்கள் பயணித்துள்ளனர். அதேபோல ராணுவ ஹெலிகாப்டரில் 3 ராணுவ வீரர்கள் பயணித்துள்ளனர். இவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
இச்சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பக்கத்தில், ”வாஷிங்டன்னில் நடந்த துயரமான விமான மோதல் விபத்தில் உயிரிழந்தோருக்காக வருந்துகிறேன். அவர்களின் குடும்பத்தாருக்கு எனது ஆறுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இத்துயர்மிகு நேரத்தில் அமெரிக்க மக்களோடு துணை நிற்கிறோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.