அர்ச்சகர்களுக்கு ரூ.18,000, மக்களுக்கு ரூ.10 லட்சம் காப்பீடு, மகளிருக்கு ரூ.2,100 - கேஜ்ரிவாலின் அசத்தல் வாக்குறுதிகள்!


புதுடெல்லி: டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளாக 15 வாக்குறுதிகளை ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப் பாளர் அரவிந்த் கேஜ்ரிவால் இன்று வெளியிட்டார்.

ஆம் ஆத்மி கட்சியின் வாக்குறுதிகளாக கீழ் காண்பவை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதில்,”பெண்களுக்கான மாதாந்திர நிதி உதவித் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பெண்ணின் வங்கிக் கணக்கிலும் மாதம் தோறும் ரூ.2,100 டெபாசிட் செய்யப்படும். சஞ்சீவனி திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கு தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை. தவறான தண்ணீர் கட்டணங்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.

2020ம் ஆண்டிலும் நாங்கள் அளித்த 24 மணி நேரமும் தண்ணீர் வழங்குவோம், யமுனையை சுத்தம் செய்வோம், டெல்லி சாலைகளை ஐரோப்பிய தரத்துக்கு மாற்றுவோம் என்ற மூன்று வாக்குறுதிகளையும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிச்சயம் நிறைவேற்றுவோம். தலித் மாணவர்கள் வெளி நாடுகளில் உள்ள பல்கலைக் கழகங்களில் சேர்க்கை பெற அம்பேத்கர் உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களின் கல்வி செலவுகளை டெல்லி அரசு ஏற்கும். மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் டெல்லி மெட்ரோவில் 50% சலுகை, கோயில் அர்ச்சகர்களுக்கு மாதம்தோறும் ரூ.18,000 வழங்கப்படும். இலவச குடிநீர், இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் வாடகைதாரர்களுக்கும் நீட்டிக்கப்படும். போர்க்கால அடிப்படையில் கழிவுநீர் குழாய்கள் சரி செய்யப்படும்.

ஒன்றரை ஆண்டுகளில் பழைய கழிவுநீர் குழாய்கள் மாற்றப்படும். ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி மீண்டும் தொடங்கப்படும். ஆட்டோ ஓட்டுநர்களின் மகள்களின் திருமணத்துக்கு ரூ.1 லட்சம், குழந்தைகளுக்கு இலவச பயிற்சி, ரூ.10 லட்சம் இலவச ஆயுள் காப்பீடு, ரூ.5 லட்சம் சுகாதார காப்பீடு வழங்கப்படும். தனியார் பாதுகாவலர்களை பணியமர்த்த குடியிருப்பாளர் நல சங்கங்களுக்கு (RWA) நிதி வழங்கப்படும்” என்று அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

x