புதுடெல்லி: அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்ச ரூபாயை முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காரணமானவர்களிடமிருந்து பெற்று தர உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று (27.01.2025) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “எப்ஐஆர் ஆவணத்தை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் எவ்வளவு நேரம் இருந்தது?. மாணவி தொடர்பான விவரங்களை வெளியிட்டது யார்?. எப்ஐஆர் கசிந்த விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?. மாணவியின் தரவுகள் தற்போதும் சமூக வலைதளங்களில் உள்ளதா? என சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
அதற்கு தமிழக அரசு சார்பில், ‘மாணவியை பாதுகாக்க அரசு சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கத் தயாராக இருந்தோம். எப்ஐஆரை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு தமிழக காவல்துறை அதிகாரி என்ன செய்வார் ?’ என கேள்வி எழுப்பப்பட்டது.
இதனையடுத்து அண்ணா பல்கலை. மாணவி வழக்கில் சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர் நீதிமன்றம் தெரிவித்த கருத்துக்கும், அவர் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவுக்கும் உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது தேவையற்றது என முகுல் ரோத்தகி வாதிட்டார். அந்த வாதத்தை ஏற்று உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு இடைக்கால இழப்பீடாக 25 லட்ச ரூபாயை முதல் தகவல் அறிக்கை கசிந்ததற்கு காரணமானவர்களிடம் இருந்து பெற்று தர உத்தரவிட்டது.