புதுடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல் குற்றவாளியான தஹாவூர் ராணாவை இந்தியாவிடம் ஒப்படைக்க அமெரிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த 2009ம் ஆண்டு கைது செய்யப்பட்ட ராணா அமெரிக்க சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்தக் கோரி இந்தியா சார்பில் அமெரிக்காவின் கீழ் நீதிமன்றங்களில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த கீழ் நீதிமன்றங்கள் அவரை நாடு கடத்த உத்தரவிட்டன.
இந்த உத்தரவை எதிர்த்து ராணா சார்பில் அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த டிசம்பர் 16ம் தேதி நடந்த விசாரணையின்போது ஆஜரான அமெரிக்க சொலிசிட்டர் ஜெனரல் எலிசபெத் பி.பிரலோகர், ராணாவின் மனுவை தள்ளுபடி செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
இந்நிலையில், கடந்த 20ம் தேதி புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்றார். அடுத்த நாளான 21ம் தேதி தஹாவூர் ராணாவின் மனுவை நிராகரித்த உச்சநீதிமன்றம், அவரை இந்தியாவிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
முன்னதாக, கடந்த 2008ம் ஆண்டு மும்பையின் சத்ரபதி ரயில் நிலையம் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் புகுந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் பயங்கர தாக்குதல் நடத்தினர். சுமார் 60 மணி நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் வெளிநாட்டினர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளில் ஒருவரும் பாகிஸ்தானி-அமெரிக்கருமான டேவிட் ஹெட்லி. இவருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தவர் கனடா வாழ் பாகிஸ்தானியான தஹாவூர் ராணா. மும்பை தாக்குதலை திட்டமிடுவதற்காக மும்பையின் தாஜ் மஹால் ஓட்டலில் சில நாட்கள் தங்கியிருந்து நோட்டமிட்டதாக ராணா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.