பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை விதிக்கக் கோரி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் ஆர்.ஜி.கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் டாக்டரை ஒருவரை, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் சிபிஐ நேற்று மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் சஞ்சய் ராய்க்கு விசாரணை நீதிமன்றம் வழங்கிய தண்டனை போதுமானதாக இல்லை என்று கூறி இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதிகள், டெபாங்சு பசாக், எம்டி ஷப்பர் ரஷிதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், "இதே கோரிக்கையுடன் மேற்கு வங்க மாநில அரசும் மனு ஒன்றை தக்கல் செய்துள்ளது. அதனுடன் சேர்த்து சிபிஐயின் மேல்முறையீட்டு மனுவும் வரும் 27-ம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்" என்று தெரிவித்தனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் விசாரணை நீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்தத் தீர்ப்பில், "குற்றவாளி சஞ்சய் ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுகிறது. இதன்மூலம் அவர் தனது வாழ்வின் கடைசி நாள் வரை சிறையில் இருப்பார். மேலும் அவருக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது" என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.