புதுடெல்லி: தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கார் மீது கற்கள் வீசப்பட்ட சம்பவம் நாடுமுழுவதும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அரவிந்த் கேஜ்ரிவால் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவருக்கு கருப்புக்கொடி காட்ட ஒரு குழு முயன்றது. அந்தக் குழுவில் இருந்து கற்கள் வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்த வீடியோவை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. மேலும், இது பாஜகவின் திட்டமிட்ட தாக்குதல் என்றும் ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது.
அதே நேரத்தில் கேஜ்ரிவாலை எதிர்த்துப் போட்டியிடும் பாஜக வேட்பாளர் பர்வேஷ் சாஹிப் சிங், கேஜ்ரிவாலிடம் மக்கள் கேள்விகள் கேட்க முயன்றதாகவும், அப்போது கேஜ்ரிவாலின் வாகனம் இரண்டு இளைஞர்கள் மீது மோதியதாகவும், அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
கேஜ்ரிவாலின் கார் மீது யாரும் கற்களை வீசவில்லை என்றும், ஆனால் சிலர் கருப்புக் கொடி காட்ட முயன்றனர் என்றும், உடனடியாக அவர்கள் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டனர் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு இசட்-பிளஸ் பாதுகாப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.