உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 12 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் இந்தியர்கள் பலர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தப் போரில் ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 12 இந்தியர்கள் உயிரிழந்துவிட்டனர். மேலும் 16 பேரைக் காணவில்லை.
அண்மையில் ரஷ்யாவில் இறந்த இந்தியர் பினில் பாபுவின் மறைவு துரதிருஷ்டவசமானது. பினில் பாபவின் குடும்பத்தாருக்கு எங்கள் இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம். அவரது உடலை ரஷ்யாவிலிருந்து இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக ரஷ்ய அதிகாரிகளுடன் நமது தூதரக அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகின்றனர்.
மேலும், போரில் மற்றொரு இந்தியர் காயமடைந்து மாஸ்கோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சை முடிந்ததும் விரைவில் இந்தியா அழைத்து வரப்படுவார்.
ரஷ்ய ராணுவத்தில் பணிபுரிந்த 126 இந்தியர்களில் 96 பேர் ஏற்கெனவே தாயகம் திரும்பிவிட்டனர். மீதமுள்ள 30 பேரில் 12 பேர் உயிரிழந்துவிட்டனர். 16 பேரைக் காணவில்லை என்று ரஷ்ய ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களை விரைவில் எங்களிடம் ஒப்படைக்குமாறு ரஷ்ய அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.