தேசிய நெடுஞ்சாலைகளில் தனியார் வாகனங்களில் டோல் கட்டணம் வசூலிக்க மாதாந்திர மற்றும் வருாடாந்திர பாஸ் அறிமுகம் செய்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியதாவது: டோல்கேட் வருவாயில் 74 சதவீதம் வர்த்தக வாகனங்களிடம் இருந்து பெறப்படுகிறது. இதில் தனியார் வாகனங்களின் பங்களிப்பு 26 சதவீதம் மட்டுமே. அதனால் தனியார் வாகனங்களுக்கு மாதாந்திர மற்றும் வருடாந்திர டோல் பாஸ் வழங்குவது பற்றி மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தனியார் வாகனங்களிடம் இருந்து பெறப்படும் டோல் வரி குறைவு என்பதால் அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படாது.
மேலும் பாஸ்டேக் வசதியுடன் குளோபல் நேவிகேஷன் செயற்கைகோள் (ஜிஎன்எஸ்எஸ்) அடிப்படையில் டோல் கட்டணம் வசூலிக்கும் முறையை அமல்படுத்தவும் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இந்த முறை தற்போதைய டோல் கட்டண வரி வசூலிப்பை விட சிறப்பானதாக இருக்கும்.
கர்நாடகாவில் பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலை, ஹரியானாவில் பானிபட் - ஹிசார் நெடுங்சாலையில் சோதனை அடிப்படையில் இந்த முறை கடந்தாண்டு ஜூலை மாதம் அமல்படுத்தப்பட்டது.
நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் சரியான தூரத்துக்கான கட்டணத்தை மட்டும் வசூலிப்பது, போக்குவரத்து நெரிசலை குறைப்பதுதான் இந்த நடவடிக்கையின் நோக்கம். கடந்த 2018-19-ம் ஆண்டில் டோல் பிளாசாக்களில் வாகனங்கள் காத்திருக்கும் நேரம் 8 நிமிடங்களாக இருந்தது. பாஸ்டேக் அறிமுகம் மூலம் காத்திருப்பு நேரம் 47 வினாடிகளாக குறைந்தது. சில இடங்களில் மட்டும் பரபரப்பான நேரங்களில் இன்னும் தாமதம் ஏற்படுகிறது.
கிராம மக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில், இனி டோல் வரி வசூல் மையங்கள் கிராமங்களுக்கு வெளியே அமைக்கப்படும். இவ்வாறு நிதின்கட்கரி தெரிவித்தார்.