2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக்கொண்டால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு


திருப்பதி: ஆந்திரா உள்ளாட்சித் தேர்தலில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள்தான் போட்டியிட முடியும் என்று அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக திருப்பதி அருகே செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சந்திரபாபு நாயுடு, “முன்னர் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றவர்கள், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டிருந்தது. இனி அப்படி இல்லை. 2 குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்ற தம்பதியினர்தான் உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடலாம். அப்படி அதிக குழந்தைகளைப் பெற்றவர்களே கவுன்சிலர்களாக, மேயர்களாக பதவியைப் பெறவும் முடியும்.

ஜப்பான், தென் கொரியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதால், பணிகளுக்கு இங்கிருந்து நாம் செல்ல வேண்டிய நிலைமை இருக்கிறது. நமது நாட்டிலும் அப்படியான ஒரு நிலைமை வந்துவிடக் கூடாது. எனவே ஆந்திராவில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதி வழங்கப்படும். இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்று கொள்ளும் தம்பதியினருக்கு கூடுதல் சலுகைகள் வழங்கப்படும் ” என்றார்.

முன்னதாக ஆந்திராவில் 2 குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விதிக்கப்பட்ட தடை அண்மையில் நீக்கப்பட்டது.

x