யுபிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கு: பூஜா கேத்கரை பிப். 14 வரை கைது செய்ய தடை


யுபிஎஸ்சி தேர்வு முறைகேடு வழக்கில் முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரை பிப். 14 வரை கைது செய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியவர் பூஜா கேத்கர். ஐஏஎஸ் தேர்வில் ஓபிசி மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டை முறைகேடாக பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் இவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. இவற்றை பூஜா கேத்கர் மறுத்து வருகிறார்.

இது தொடர்பான வழக்கில் பூஜாவை கைது செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இடைக்கால தடை விதித்தது. பிறகு இதனை விலக்கிக் கொண்டது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பூஜா மேல்முறையீடு செய்தார். அவரது மனு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, சதீஷ் சந்திர சர்மா அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது பூஜாவின் தற்போதைய நிலை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு அவர் தனது வேலையை இழந்து சட்டப்பூர்வ தீர்வுகளை தேடிக்கொண்டிருப்பதாக அவரது வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து பூஜாவின் முன்ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்குமாறு டெல்லி அரசு மற்றும் யுபிஎஸ்சி-க்கு நீதிபதிகள் உத்தரவிட்டு வழக்கை பிப்ரவரி 14-க்கு ஒத்தி வைத்தனர். அதுவரை பூஜாவை கைது செய்ய தடை விதித்தனர்.

x