டெல்லி மதுபான கொள்கை ஊழல் தொடர்பாக அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
டெல்லியில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முன்னாள் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், துணை முதல்வர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் கைதாகி ஜாமீனில் உள்ளனர்.
முன்னதாக, கடந்த நவம்பர் 6-ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, அரசின் முன் அனுமதி பெறாமல், அரசு ஊழியர் ஒருவரை பணமோசடி வழக்கில் கீழ் கைது செய்ய முடியாது என்று தெரிவித்திருந்தது.
முன்பு, சிபிஐ மற்றும் மாநில காவல் துறை போன்ற விசாரணை அமைப்புகளுக்கு மட்டுமே அரசின் முன் அனுமதி கட்டாயம் என்றிருந்தது.
இந்நிலையில் இந்தத் தீர்ப்பின்படி கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அனுமதி கோரி, துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவுக்கு அமலாக்க துறை கடிதம் எழுதியிருந்தது. அவரும் அதற்கு ஒப்புதல் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து அர்விந்த் கேஜ்ரிவால் மீது வழக்கு தொடர அமலாக்க துறைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 5-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.