சென்செக்ஸ் 1,048 புள்ளிகள் வீழ்ச்சி: முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு


இந்திய பங்குச் சந்தைகள் நேற்று சரிந்ததால் ஒரே நாளில் முதலீட்டாளருக்கு ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

இந்திய பங்குச் சந்தைகள் தொடர்ந்து 4-வது நாளாக நேற்றும் சரிந்தன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் நேற்று 1,049 புள்ளிகள் சரிந்து (-1.36%) 76,330-ல் நிலை பெற்றது. இதுபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிப்டி 345 புள்ளிகள் சரிந்து (-1.47%) 23,085-ல் நிலை பெற்றது. அனைத்து துறைகளின் குறியீட்டெண்களும் சரிவில் முடிந்தன.

இதில் அதிகபட்சமாக ரியல் எஸ்டேட் துறை 6.5% சரிந்தது. டிரென்ட், பாரத் பெட்ரோலியம், அதானி போர்ட்ஸ் பங்குகள் அதிக சரிவை சந்தித்தன. அதேநேரம் நடுத்தர மற்றும் சிறிய நிறுவன குறியீட்டெண் 4 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன. இந்த சரிவால் முதலீட்டாளருக்கு ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 3 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்ததும் அந்நிய முதலீட்டாளர்கள் அதிக அளவில் பங்குகளை விற்றதும் பங்குச் சந்தை சரிவுக்கு முக்கிய காரணங்களாக அமைந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இதுதவிர, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் (வர்த்தகத்தின் இடையே) 58 பைசா சரிந்து 86.62 ஆனது. இதுவும் பங்குச் சந்தை சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்ததாகக் கூறப்படுகிறது.

x