வங்கதேச தூதருக்கு வெளியுறவு துறை சம்மன்: எல்லையில் பதற்றம் குறித்து சரமாரி கேள்வி


இந்தியாவுக்கான வங்கதேச துணைத் தூதர் நூருல் இஸ்லாமை வெளியுறவு அமைச்சகம் நேற்று நேரில் அழைத்து இந்திய – வங்கதேச எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து விவாதித்தது.

வங்கதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவல், கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களை தடுப்பதற்காக எல்லையில் வேலை அமைக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் இருதரப்பு ஒப்பந்தத்தை மீறி எல்லையில் 5 இடங்களில் இந்தியா வேலி அமைக்க முயற்சிப்பதாக வங்கதேச அரசு நேற்று முன்தினம் குற்றம் சாட்டியது.

இதையடுத்து இது தொடர்பாக நேரில் விளக்கம் தரக்கோரி அடுத்த சில மணி நேரத்தில் டாக்காவில் உள்ள இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பியது. இதைத் தொடர்ந்து இந்திய தூதர் பிரணாய் வர்மா, வங்கதேச வெளியுறவு செயலாளர் ஜாஷிம் உதினை சந்தித்தார். இந்த சந்திப்பு சுமார் 45 நிமிடங்கள் நீடித்தது.

இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பிரணாய் சர்மா, “பாதுகாப்புக்காக எல்லையில் வேலி அமைக்கும் விவகாரத்தில் இந்தியா - வங்கதேசம் இடையே புரிதல் உள்ளது. இது தொடர்பாக இரு நாட்டு எல்லைப் பாதுகாப்பு படையினரும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எல்லையில் குற்றங்களை தடுப்பதற்கு ஒரு கூட்டு அணுகுமுறை ஏற்படும் என நம்புகிறோம்" என்றார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள வங்கதேச துணைத் தூதர் நூருல் இஸ்லாமை வெளியுறவு அமைச்சகம் நேற்று நேரில் அழைத்தது. இந்திய – வங்கதேச எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து அவருடன் விவாதித்தது.

இந்தியா - வங்கதேசம் இடையிலான ராஜதந்திர உறவுகள் வரலாற்று ரீதியாக ஸ்திரமாக இருந்து வருகிறது. ஆனால் வங்கதேசத்தில் மாணவர்கள் தலைமையிலான புரட்சியால் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்க்கப்பட்டு, அவர் இந்தியாவில் தஞ்சம் அடைந்த பிறகு இரு நாட்டு உறவில் விரிசல் ஏற்பட்டது. வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் மீதான தாக்குதலை இடைக்கால அரசு கட்டுப்படுத்த தவறியும் இதற்கு காரணமாக அமைந்தது.

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான குற்றவழக்குகளில் அவர் விசாரணையை எதிர்கொள்வதற்காக அவரை வங்கதேசத்துக்கு நாடு கடத்துமாறு இந்தியாவிடம் வங்கதேச இடைக்கால அரசு கடந்த மாதம் கேட்டுக்கொண்டது. ஆனால் இதற்கு இந்தியா உடன்படவில்லை.

x