இஸ்ரேலுக்கு ஐ.நா. கண்டனம் முதல் கேஜ்ரிவால் மனு நிராகரிப்பு வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> இஸ்ரேல் தாக்குதலுக்கு ஐ.நா. கண்டனம்: ரஃபா நகரில் அமைந்துள்ள தற்காலிக முகாம்கள் மீது நேற்று முன்தினம் (மே 26) இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதில் சுமார் 45 பேர் உயிரிழந்த நிலையில் இதற்கு தனது கடுமையான கண்டனத்தை ஐ.நா பொதுச் செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் தெரிவித்துள்ளார்.

> “ஒடிசாவின் எதிர்காலம் முக்கியம்” - பிரதமர் மோடி: ஜனநாயக நாட்டில் பகை என்பதற்கு இடம் இல்லை. இப்படி இருக்கும் சூழலில் நான் ஒடிசாவின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வதா அல்லது நவீன் பட்நாயக் உடனான உறவு முக்கியமா என்ற முடிவை எடுக்க வேண்டி இருந்தது. எனக்கு ஒடிசாவின் எதிர்காலம் தான் முக்கியம். அதற்காக நான் சில தியாகங்களை செய்ய வேண்டி இருந்தது. தேர்தலுக்கு பிறகு அனைவரையும் நான் சமாதானம் செய்வேன். இங்கு எனக்கு யாருடனும் பகை என்பது கிடையாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். மேலும் மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

> கேஜ்ரிவால் மனுவை அவசரமாக விசாரிக்க மறுப்பு: மருத்துவக் காரணங்களுக்காக தனது இடைக்கால ஜாமீனை மேலும் 7 நாட்களுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற அரவிந்த் கேஜ்ரிவாலின் மனுவினை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்ற விடுமுறை கால பெஞ்ச் மறுத்துவிட்டது. பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்த கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய இடைக்கால ஜாமீன் வரும் 1ம் தேதி முடிவடைகிறது. ஜூன் 2ம் தேதி அவர் மீண்டும் சரணடைய வேண்டும்.

> மிசோரம் கல்குவாரியில் பாறைகள் சரிந்து 10 பேர் உயிரிழப்பு: மிசோரம் மாநிலம் அஸ்வால் மாவட்டத்தில் கனமழை காரணமாக கல்குவாரியில் பாறைகள் சரிந்து விழுந்ததில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் சிக்கியுள்ள நிலையில் அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.

> ‘நான் காலி ப்ரூஃப் ஆகிவிட்டேன்’ - பிரதமர் மோடி: எதிர்க்கட்சிகள் அவர்களுக்கு அவதூறு செய்ய உரிமை இருப்பதாக நம்புகின்றனர். கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து அவதூறு செய்யப்பட்டதால் நான் காலி ப்ரூஃப் ஆகிவிட்டேன் என்று பிரதமர் மோடி எதிர்க்கட்சிகள் மீது குற்றம்சாட்டியுள்ளார்.

> குர்மீத் ராம் ரஹீம் உள்ளிட்ட 4 பேர் விடுதலை: தேரா முன்னாள் மேலாளர் ரஞ்சித் சிங் கொலை வழக்கில், தேரா சச்சா சவுதா தலைவர் குர்தீம் ராம் ரஹீம் மற்றும் 4 பேரை பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. தனது தண்டனையை எதிர்த்து குர்தீம் ராம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவினை ஏற்று உயர்நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.

> ராஜ்கோட் தீ விபத்தில் மேலும் ஒருவர் கைது: ராஜ்கோட் டிஆர்பி விளையாட்டு மையத்தின் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் கொல்லப்பட்ட வழக்கில் குஜராத் போலீஸார் விளையாட்டு மையத்தின் மேலும் ஒரு பங்குதாரர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

> “பிரதமருக்கு தமிழக மக்கள் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்”: “செங்கோலை மீட்டெடுத்ததை தேசம் பெருமிதத்துடன் கொண்டாடுகிறது. செங்கோலை மீண்டும் உயர்ந்த தேசிய பீடத்தில் நிலைநிறுத்திய பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டு மக்கள் என்றும் நன்றியுள்ளவர்களாக இருப்பார்கள்.” என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

> ஜூன் 1-ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: ஜூன் 1ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள், மக்களவை வேட்பாளர்கள், தலைமை முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெறும் என அக்கட்சி பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். முன்னதாக, திமுக மூத்த நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

> பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் முதல் சுற்றில் ரஃபேல் நடால் தோல்வி: நடப்பு பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் தோல்வியை தழுவி ரஃபேல் நடால் வெளியேறியுள்ளார். இந்த தொடரில் இப்படி முதல் சுற்றோடு அவர் வெளியேறியது இதுவே முதல்முறை.

x