சத்தீஸ்கரில் 3 நக்சல்கள் சுட்டுக் கொலை


ராய்ப்பூர்: நக்சல் மற்றும் மாவோயிஸ்ட் தீவிரவாதிகளை வேரறுக்க மத்திய உள்துறை உறுதி பூண்டுள்ளது. இதன்ஒரு பகுதியாக சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகளுக்கு எதிராக மத்திய, மாநில அரசு படைகள் இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றன. கடந்த 2024-ம் ஆண்டில் மட்டும் சத்தீஸ்கரில் 90-க்கும் மேற்பட்ட என்கவுன்ட்டர்கள் நடத்தப்பட்டு, 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தற்போது சத்தீஸ்கரில் நக்சல் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த மாவட்டங்களில் சுமார் 1,000-க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 4-ம் தேதி அபுஜ்மாத் பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் 5 நக்சல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 6-ம் தேதி நக்சல் தீவிரவாதிகள் பிஜாப்பூர் மாவட்டம், அம்பிலி பகுதியில் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் 8 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்க சத்தீஸ்கர் காவல் துறையை சேர்ந்த டிஆர்ஜி படை வீரர்கள் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழலில் சுக்மா மாவட்ட வனப்பகுதியில் பதுங்கி இருந்த நக்சல் தீவிரவாதிகள் மீது டிஆர்ஜி படை வீரர்கள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 3 தீவீரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கிருந்து தப்பியோடிய தீவிரவாதிகளை பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து டிஆர்ஜி படை வட்டாரங்கள் கூறியதாவது: பாதுகாப்புப் படை வீரர்கள் செல்லும் சாலைகளில் நக்சல் தீவிரவாதிகள் கண்ணிவெடிகளை மறைத்துவைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அண்மையில் அவாபல்லி பகுதியில் சாலையில் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடியை கண்டுபிடித்து அகற்றினோம்.

எங்களிடம் உள்ள கருவிகள் மூலம் 2 அடி ஆழத்தில் புதைத்து வைக்கப்பட்ருக்கும் வெடிகளை மட்டுமே கண்டறிய முடியும். கடந்த 6-ம் தேதி நடத்தப்பட்ட கண்ணிவெடி தாக்குதலின்போது சுமார் 5 அடி ஆழத்தில் வெடிபொருட்கள் புதைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த கண்ணிவெடியை முன்கூட்டியே கண்டறிய முடியவில்லை. தற்போது கண்ணிவெடிகளை கண்டறிய டிஆர்ஜி, கமாண்டோ வீரர்கள், சிஆர்பிஎப் வீரர்கள் செல்லும் சாலைகளில் அதிநவீன கருவிகள், மோப்ப நாய்கள் உதவியுடன் தீவிர சோதனை நடத்தப்படுகிறது. இவ்வாறு டிஆர்ஜி படை வட்டாரங்கள் தெரிவித்தன.

x