அந்தமானின் பழமையான ஜராவா பழங்குடியினத்தை சேர்ந்த சமூகத்தவர்கள் முதன்முறையாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. இது வரலாற்று முக்கியத்துவம் வாயந்த நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
ஜராவா பழங்குடியினர் பாதியளவு நாடோடி வாழ்க்கை முறையை கடைபிடிப்பவர்கள். வரலாற்று ரீதியாக அவர்கள் தங்களது தனித்துவமான கலாச்சார நடைமுறைகள் மற்றும் மரபுகளை பாதுகாக்க வெளிப்புற தொடர்புகளிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்பவர்கள்.
இதுகுறித்து தெற்கு அந்தமான் மாவட்ட தேர்தல் அதிகாரி அர்ஜூன் சர்மா பிடிஐ நிறுவனத்திடம் கூறியதாவது: அந்தமானில் வசிக்கும் மிக பழைமையான பழங்குடியினத்தை சேர்ந்த ஜராவா சமூகத்தினர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு 19 உறுப்பினர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அந்தமான்-நிகோபார் நிர்வாகத்தின் கடிமான உழைப்பால் இது சாத்தியமாகியுள்ளது. தலைமை செயலர் சந்திர பூஷண் குமார், ஜராவா சமூகத்தினருக்கு வாக்காளர் அட்டைகளை வழங்கினார்.
ஜராவா சமூகத்தினரின் தனித்துவமான அடையாளத்தை நிலை நிறுத்தவும், அவர்களின் தனியுரிமையை பாதுகாக்கவும் தேவையான விரிவான நடவடிக்கை எடுக்க நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம். அவர்களின் அன்றாட வாழ்வில் தலையீடு குறைவாக இருக்கும் வகையில் வாக்காளர் சேர்க்கை முறை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்திய குடிமக்களின் உரிமைகள் பற்றிய புரிதல் அவர்களுக்கு அதிகபட்சமாகவே உள்ளது.
ஜராவா பழங்குடியினர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது இந்திய ஜனநாயக பரிணாம வளர்ச்சியில் ஒரு மிக முக்கிய சாதனை. மேலும், அனைத்து குடிமக்களின் சமத்துவத்தை உறுதி செய்வதற்கான நாட்டின் உறுதிப்பாட்டை இது எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு அர்ஜூன் சர்மா தெரிவித்தார்.