அரசு இல்லத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன் என்று டெல்லி முதல்வர் ஆதிஷி குற்றம் சாட்டி உள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டெல்லியில் நான் வசிக்கும் அரசு இல்லத்தில் இருந்து திங்கள்கிழமை இரவு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டேன். எனது உடைமைகள் வெளியே வீசப்பட்டன. கடந்த 3 மாதங்களில் 2-வது முறையாக என்னை அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றி உள்ளனர். இதற்கு மத்தியில் ஆளும் பாஜக அரசே காரணம்.
எனது வீட்டை பறிப்பது, எனது குடும்பத்தை அவதூறாக பேசுவதன் மூலம் என்னை தடுத்துவிடலாம் என்று பாஜக கருதுகிறது. நான் டெல்லி மக்களோடு, மக்களாக வாழ்ந்து சேவையாற்றுவேன். இவ்வாறு ஆதிஷி தெரிவித்தார்.
ஆம் ஆத்மி மூத்த தலைவர் சஞ்சய் சிங் கூறும்போது, “முன்னாள் முதல்வர் கேஜ்ரிவால் வாழ்ந்த வீட்டில் நீச்சல் குளம் உள்ளது. தங்கத்தில் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது என்று பாஜகவினர் பொய் தகவல்களை பரப்புகின்றனர். டெல்லியில் பிரதமரின் இல்லம் ரூ.2,700 கோடியில் கட்டப்படுகிறது. அவர் ஒரு நாளைக்கு 3 முறை ஆடைகளை மாற்றுகிறார். ரூ.10 லட்சம் மதிப்புள்ள பேனாவை பயன்படுத்துகிறார். அவரிடம் 6,700 காலணிகள் உள்ளன" என்று தெரிவித்தார்.
பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: டெல்லி முதல்வர் ஆதிஷி பொய் கூறுகிறார். கடந்த ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி அவருக்கு சீஷ் மஹால் ஒதுக்கப்பட்டது. அந்த வீட்டில் குடியேறினால் கேஜ்ரிவால் மனதளவில் பாதிக்கப்படுவார் என்பதால் சீஷ் மஹாலுக்கு ஆதிஷி செல்லவில்லை. இதன்பிறகு வேறு 2 பங்களாக்கள் அவருக்கு ஒதுக்கப்பட்டன. இதில் ஏதாவது ஒரு பங்களாவை தேர்ந்தெடுக்குமாறு அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதுதான் உண்மை. இவ்வாறு அமித் மாளவியா தெரிவித்துள்ளார்.