பிரியங்கா கன்னங்கள் போன்று சாலை அமைப்பேன்: பாஜக மூத்த தலைவரின் கருத்துக்கு காங்கிரஸ் கண்டனம் புதுடெல்லி:


ரமேஷ் பிதுரி

புதுடெல்லி: பிரியங்கா காந்தியின் கன்னங்கள் போன்று சாலைகள் அமைப்போம் என்று பாஜக மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி கூறியுள்ளார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லியில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. மூன்று கட்சிகளும் பல்வேறு தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளன.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி மூத்த தலைவருமான ஆதிஷி, கல்காஜி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் அந்த கட்சியின் மூத்த தலைவர் ரமேஷ் பிதுரி போட்டியிடுகிறார். இவர் 3 முறை எம்எல்ஏ ஆகவும் 2 முறை எம்பியாகவும் பதவி வகித்துள்ளார்.

டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி ரமேஷ் பிதுரி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அண்மையில் நடைபெற்ற ஒரு பிரச்சாரக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:

ஹேம மாலினியின் கன்னங்கள் போன்று பிஹாரில் சாலைகளை அமைப்பேன் என்று ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கூறினார். ஆனால் அவர் அளித்த வாக்குறுதியை அவரால் காப்பாற்ற முடியவில்லை. நான் வெற்றி பெற்றால் பிரியங்கா காந்தியின் கன்னங்களை போன்று கல்காஜி தொகுதியில் சாலைகளை அமைப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ரமேஷ் பிதுரியின் கருத்துக்கு காங்கிரஸ் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அந்த கட்சியின் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்ட பதிவில், “ரமேஷ் பிதுரியின் கருத்து வெட்கக்கேடானது. இது பாஜகவின் உண்மை முகம். இதுபோன்ற சிந்தனைகளின் தந்தை பிரதமர் நரேந்திர மோடி. அவரே பெண்களுக்கு எதிரான வார்த்தைகளை பயன்படுத்துவார். ரமேஷ் பிதுரி பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “ரமேஷ் பிதுரியின் கருத்து அவரது ஆணவத்தை வெளிப்படுத்துகிறது. அவரது உண்மையான குணத்தை பிரதிபலிக்கிறது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள் பாஜக தலைவர்களின் பேச்சில் எதிரொலிக்கிறது" என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீநடே கூறும்போது, “ரமேஷ் பிதுரியின் கருத்து அநாகரிகமானது. ஒரு பெண் எம்பி (பிரியங்கா காந்தி) குறித்து அவர் அவதூறாக பேசியுள்ளார். அவர் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் பாஜக தலைமை பகிரங்கமாக மன்னிப்பு கோர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

x