சத்தீஸ்கர் என்கவுன்ட்டரில் மாவோயிஸ்ட்கள் 4 பேர்; ஒரு தலைமை காவலர் உயிரிழப்பு


ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் நாராயண்பூர் மற்றும் தண்டேவாடா மாவட்ட எல்லைக்கு அருகே உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, சனிக்கிழமை மாலை அப்பகுதிக்கு சென்ற பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது வனப் பகுதியில் மறைந்திருந்த மாவோயிஸ்ட்கள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே நள்ளிரவு வரை கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. சண்டை முடிந்த பிறகு அங்கிருந்து 4 மாவோயிஸ்ட்களின் உடல்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் மாவட்ட ரிசர்வ் படையைச் சேர்ந்த (டிஆர்ஜி) தலைமை காவலர் சன்னு கரம் என்பவரும் இந்த சண்டையில் உயிரிழந்தார். சம்பவ இடத்திலிருந்து ஏகே-47 ரக துப்பாக்கி உட்பட தானியங்கி ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து தப்பி ஓடிய மாவோயிஸ்ட்களை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2026-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் மாவோயிஸ்ட்களை பூண்டோடு ஒழிப்போம் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2024-ம் ஆண்டில் 200-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் கொல்லப்பட்டனர். 18 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர், 802 பேர் ஆயுதங்களை கைவிட்டனர். மேலும் கடந்த ஆண்டில் மாவோயிஸ்ட் வன்முறைக்கு 65 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

x