குஜராத்தின் போர்பந்தரில் கடலோர படை ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் உயிரிழப்பு


காந்திநகர்: குஜராத்தின் போர்பந்தர் நகரில் கடலோர காவல் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 3 பேர் உயிரிழந்தனர்.

குஜராத் மாநிலத்தின் போர்பந்தர் நகரில் உள்ள கடலோர காவல்படை விமான தளத்தில் இருந்து நவீன இலகு ரக துருவ் ஹெலிகாப்டர், நேற்று வழக்கமான பணியில் ஈடுபட புறப்பட்டது. அதில் கடலோர காவல்படை பைலட் மற்றும் வீரர்கள் 3 பேர் பயணம் செய்தனர். வானில் மேலெழும்பிய ஹெலிகாப்டரில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த ஹெலிகாப்டர், கடலோர காவல்படையின் விமான தள வளாகத்திற்குள்ளேயே கீழே விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் அதில் பயணம் செய்த 3 பேரும் உயிரிழந்தனர். விபத்து நடந்த இடத்தில் ஒரு சிலரும் காயம் அடைந்தனர். அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் மீட்பு பணிக்காக சென்ற இலகு ரக ஹெலிகாப்டர் போர்பந்தர் அருகே அரபிக் கடலில் விபத்துக்குள்ளானது. அப்போதும் 3 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டில் எச்ஏஎல் நிறுவனம் தயாரித்த துருவ் ரக ஹெலிகாப்டரில் சில குறைபாடுகள் இருப்பது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கண்டறிப்பட்டது. துருவ் ரகத்தை சேர்ந்த 325 ஹெலிகாப்டர்கள் முப்படைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

தொடர் விபத்துக்களை தொடர்ந்து இந்த ரக ஹெலிகாப்டர்களை இயக்கவது நிறுத்தப்பட்டு தொழில்நுட்ப பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இது நிறைவடைந்தபின்பு துருவ் ரக ஹெலிகாப்டர்கள் மீண்டும் பறந்தன. தற்போது துருவ் ரக ஹெலிகாப்டர் மீண்டும் விபத்தை சந்தித்துள்ளது.

x