கிராமங்களில் சாதியின் பெயரால் நஞ்சை பரப்ப முயற்சி: பிரதமர் நரேந்திர மோடி குற்றச்சாட்டு


டெல்லி பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத பெருவிழாவை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அங்கு அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை அவர் பார்வையிட்டார். உடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளார். படம்: பிடிஐ

புதுடெல்லி: கிராமங்களில் சாதியின் பெயரால் நஞ்சை பரப்பவும் சமூக கட்டமைப்பை பலவீனப்படுத்தவும் சிலர் முயற்சி செய்கின்றனர். இந்த சதிகளை முறியடித்து சமூக நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லி பாரத் மண்டபத்தில் கிராமப்புற பாரத பெருவிழாவை அவர் நேற்று தொடங்கி வைத்தார். வரும் 2047-ம் ஆண்டில் வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதை கருப்பொருளாக கொண்டு தொடர்ந்து 4 நாட்கள் பெருவிழா நடைபெறவுள்ளது தொடக்க விழாவில் பிரதமர் பேசியதாவது: கிராமத்தில் பிறந்ததால் நான் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டேன். இதன் காரணமாக கிராமங்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று சிறுவயதிலேயே உறுதி பூண்டேன். கடந்த 2014-ல் நாட்டின் பிரதமராக பதவியேற்றேன். அப்போதுமுதல் கிராமங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளித்து வருகிறேன். கிராமப்புற மக்களுக்கு கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதை லட்சியமாகக் கொண்டு மத்திய அரசு செயல்படுகிறது.

குறிப்பாக கிராமங்களை சேர்ந்த ஏழை குடும்பங்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வீட்டுக்கும் கழிப்பறை கட்டப்படுகிறது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படுகிறது. விவசாயம் சார்ந்த கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கு குறைந்த விலையில் டிஏபி உரம் வழங்கப்படுகிறது. கிராமங்களை சேர்ந்த கைவினைஞர்களின் நலனுக்காக விஸ்வகர்மா திட்டம் அமல் செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கொல்லர், குயவர், தச்சர் உள்ளிட்ட பல்வேறு கைவினைஞர்கள் பலன் அடைந்து வருகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மூலம் புதிய புரட்சிகள் நடைபெற்று வருகின்றன. பிஎம் கிராம சதக் யோஜனா திட்டத்தின் கீழ்கடந்த 10 ஆண்டுகளில் கிராமங்களில் சுமார் 4 லட்சம் கி.மீ. தொலைவுக்கு புதிய சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அனைத்து கிராமங்களும் டிஜிட் டல்மயமாக்கப்பட்டு வருகின்றன. இப்போது கிராமங்களில் சுமார் 94 சதவீதம் பேர்செல்போன்களை பயன்படுத்துகின்றனர். செல்போன் வாயிலாக அவர்கள் வங்கி சேவைகளை பயன்படுத்துகின்றனர். யுபிஐ மூலம் பணப் பரிமாற்றம் செய்கின்றனர். கிராமங்களில் முத்ரா திட்டம், ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன.

விவசாய கடன்களின் அளவு 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. சுதந்திரத்துக்குப் பிறகு கிராமவாசிகள் தங்கள் வருமானத்தில் உணவுக்காக 50 சதவீதத்துக்கும் அதிகமாக செலவிட்டு வந்தனர். தற்போது இந்த சதவீதம் கணிசமாகக் குறைந்திருக்கிறது. இதன்காரணமாக கிராம மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திருக்கிறது. கடந்த 2011-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது கிராமங்களின் நுகர்வு 3 மடங்கு அதிகரித்துள்ளது.

கிராமங்களில் சாதியின் பெயரால் சமூகத்தில் நஞ்சை பரப்பவும் சமூக கட்டமைப்பை பலவீனப்படுத்தவும் சிலர் முயற்சி செய்கின்றனர். இந்த சதிகளை முறியடித்து கிராமங்களின் சமூக நல்லிணக்கத்தை போற்றிப் பாதுகாக்க வேண்டும். கிராமங்கள் வளர்ச்சி அடைந்தால், பாரதம் வளர்ச்சி அடையும். இதை கருத்தில் கொண்டு கிராமங்களை, வளர்ச்சி மையங்களாக மாற்ற மத்திய அரசு அதிதீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

x