ஆக்​ரா​வில் 17-ம் நூற்​றாண்​டில் அவுரங்கசீப் கட்டிய ‘முபாரக் மன்சில்’ அரண்மனை இடிப்பு


ஆக்ரா: உத்தர பிரதேசத்​தில் 17-ம் நூற்​றாண்​டில் முகலாயர்​களால் கட்டப்​பட்ட ‘முபாரக் மன்சில்’ எனப்​படும் அரண்மனை புல்​டோசர்கள் மூலம் இடிக்​கப்​பட்​டது.

உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா​வில் உலகப் புகழ்ப்​பெற்ற தாஜ்ம​கால் உள்ளது. யமுனை நதிக் கரையோரம் பல்வேறு நினை​வுச் சின்னங்கள் உள்ளன. கடந்த 17-ம் நூற்​றாண்​டில் ‘முபாரக் மன்சில்’ என்ற அரண்மனை முகலாயர்​களால் கட்டப்​பட்​டுள்​ளது.

இந்த அரண்மனை அவுரங்​கசீப்​பால் கட்டப்​பட்​டதாக கூறுகின்​றனர். முபாரக் மன்சில் குறித்து ஆஸ்திரி​யா​வின் பிரபல வரலாற்று ஆசிரியர் எப்பா கோச் தனது ‘தி கம்பிளீட் தாஜ் மகால் அண்ட் தி ரிவர்​பிரன்ட் கார்​டன்ஸ் ஆப் ஆக்ரா’ என்ற புத்​தகத்​தில் விவரித்​துள்ளார்.

முகலாயர்கள் ஆட்சி காலத்​தில் இந்த அரண்​மனை​யில் அவுரங்​கசீப், ஷாஜகான், ஷுஜா உட்பட முக்கிய பிரமுகர்கள் தங்கியதாக கூறுகின்​றனர். ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்​தில் கடந்த 1902-ம் ஆண்டு இந்த முபாரக் மன்சில் புதுப்​பிக்​கப்​பட்​டது. அப்போது பிரிட்​டிஷாரின் அலுவல​கமாக அந்த அரண்மனை மாற்​றப்​பட்​டது. மேலும், ‘தாரா நிவாஸ்’ என்றும் அழைக்​கப்​பட்​டது.

இந்நிலை​யில், முபாரக் மன்சிலை பாது​காக்​கப்​பட்ட நினை​வுச் சின்னமாக அறிவிப்பது தொடர்பாக ஆட்சேபனைகளை கேட்டு உ.பி. மாநில தொல்​லியல் ஆய்வுத் துறை​ கடந்த செப்​டம்பர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளி​யிட்​டது. அதன்​பின்னர், கடந்த 2 வாரங்​களுக்கு முன்னர் மாநில தலைநகர் லக்னோ​வில் இருந்து வந்த அதிகாரி​கள், முபாரக் மன்சிலை பாது​காப்பது தொடர்பாக ஆய்வு செய்​தனர். அவர்கள் வந்து சென்ற பிறகு முபாரக் மன்சிலை இடிக்​கும் பணி தொடங்கி​விட்​டது.
புல்​டோசர்கள் மூலம் அந்த அரண்​மனையை இடித்​தனர். நூற்றுக்​கும் மேற்​பட்ட டிராக்​டர்​களில் இடிபாடுகள் கொண்டு செல்​லப்​பட்டன. தற்போது முபாரக் மன்சிலின் பெரும்​பாலான பகுதிகள் இடிக்​கப்பட்​டுள்ளன.

இதுகுறித்து உள்ளூர்​வாசிகள் கூறும்​போது, “பில்டர் ஒருவருடன் போலீ​ஸார், அதிகாரிகள் கூட்டு சேர்ந்து இந்த அரண்​மனையை இடித்து​விட்​டனர்” என்று குற்றம் சாட்டு​கின்​றனர்.

ஆட்சியர் உத்தரவு: இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மல்லப்பா பங்காரி கூறுகை​யில், “முபாரக் மன்சில் குறித்த பிரச்​சினை எங்கள் கவனத்​துக்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க இந்திய தொல்​லியல் ஆய்வுத் துறை மற்றும் வரு​வாய்த் துறை​யினருக்கு உத்​தர​விடப்​பட்​டுள்​ளது. மேலும், இனிமேல் அந்த இடத்​தில் வேறு ​மாற்​றங்​கள் எது​வும் செய்​யக் கூடாது என்று உத்​தர​விடப்​பட்​டுள்​ளது” என்​றார்​.

x