மணிப்பூர் கலவரங்களுக்காக அம்மாநில முதல்வர் பிரேன் சிங் மன்னிப்பு கோரியுள்ளார். 2025-ல் அமைதி திரும்பும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைத்தேயி - குகி சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்ததில் 250-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர். மணிப்பூரில் அவ்வப்போது வன்முறை நிகழ்வதால் இதுவரை இயல்புநிலை திரும்பவில்லை.
இந்நிலையில் மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்த ஆண்டு முழுவதும் மிகவும் துரதிருஷ்டவசமானது. கடந்த 2023 மே 3-ம் தேதி முதல் தற்போது வரை நடந்த சம்பவங்களுக்காக நான் வருந்துகிறேன். பலர் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். பலர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர். இதற்காக மன்னிப்பு கோருகிறேன். கடந்த மூன்று, நான்கு மாதங்களில் வன்முறை குறைந்துள்ளது. அமைதிக்கான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2025 புத்தாண்டில் மாநிலத்தில் இயல்புநிலை மற்றும் அமைதி திரும்பும் என நம்புகிறேன்.
என்ன நடந்ததோ அது நடந்துவிட்டது. அனைத்து சமூக மக்களும் கடந்த கால தவறுகளை மறந்து புதிய வாழக்கையை தொடங்க வேண்டும். அமைதியான மணிப்பூரே வளமான மணிப்பூர். நாம் அனைவரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.