ஏமனில் கேரள செவிலியருக்கு மரண தண்டனை வழங்க ஒப்புதல்


கேரள செவிலியர் ஒருவருக்கு ஏமன் நாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த தண்டனைக்கு ஏமன் அதிபர் அனுமதி வழங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த நிமிஷா பிரியா, ஏமன் தலைநகர் சனாவில் செவிலியராக பணியாற்றி வந்தார். இவர் ஏமனை சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் சேர்ந்து சனாவில் கடந்த 2015-ல் கிளினிக் தொடங்கினார். ஆனால் மஹ்தி மொத்த வருவாயையும் எடுத்துக் கொண்டு நிமிஷாவை உடல்ரீதியாக துன்புறுத்த தொடங்கினார். மேலும் நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் பறித்து வைத்துக்கொண்டார். இது தொடர்பான புகாரில் சனா போலீஸார் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மஹ்திக்கு மயக்க மருந்து செலுத்தி பாஸ்போர்ட்டை திரும்பப் பெற நிமிஷா முயன்றார். ஆனால் இந்த முயற்சியில் ஓவர் டோஸ் காரணமாக மஹ்தி உயிரிழந்தார்.

இது தொடர்பான வழக்கில் நிமிஷாவுக்கு ஏமன் நீதிமன்றம் கடந்த 2018-ல் மரண தண்டனை விதித்தது. அப்போது முதல் அவரது விடுதலைக்காக கேரளாவில் உள்ள அவரது குடும்பத்தினர் போராடி வருகின்றனர்.

நிமிஷாவின் மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் கடந்த 2023-ல் நிராகரித்தது. பாதிக்கப்பட்ட மஹ்தியின் குடும்பம் அவர்களின் பழங்குடியின தலைவரின் மன்னிப்பை பெறுவதே, நிமிஷா விடுதலையாவதற்கு ஒரே வாய்ப்பாக உள்ளது. இதற்காக நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி ஏமன் சென்றுள்ளார். அங்குள்ள இந்தியத் தூதரகத்தின் உதவியுடன் மன்னிப்பை பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். எனினும் இதற்கான முயற்சிகள் இதுவரை வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் நிமிஷாவுக்கான மரண தண்டனைக்கு ஏமன் அதிபர் ரஷாத் அல்-அலிமி தற்போது ஒப்புதல் அளித்துள்ளார். இது நிமிஷாவின் குடும்பத்தினரை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. ஒரு மாதத்திற்குள் நிமிஷா தூக்கில் இடப்படலாம் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக டெல்லியில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், “நிமிஷா பிரியாவுக்கு ஏமனில் தண்டனை விதிக்கப்பட்டது இந்தியாவுக்கு தெரியும். நிமிஷாவின் குடும்பத்தினர் அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இந்த விவகாரத்தில் அவர்களுக்கு அரசு அனைத்து உதவிகளையும் செய்து வருகிறது" என்று கூறினார்.

x