மன்மோகன் சிங் மறைந்த நிலையில் ராகுல் காந்திக்கு வெளிநாட்டுப் பயணம் அவசியமா? - பாஜக கேள்வி


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைந்த நிலையில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வெளிநாட்டுப் பயணம் அவசியமா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

இதுதொடர்பாக பாஜக தகவல் தொழில்நுட்பத்துறை பிரிவுத் தலைவரும், செய்தித் தொடர்பாளருமான அமித் மாள்வியா தனது எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது:

முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைந்து சில தினங்கள் கூட ஆகவில்லை. அவரது மறைவுக்காக மத்திய அரசு 7 நாள் துக்கம் கடைப்பிடித்து வருகிறது. மன்மோகன் சிங் மறைவுக்காக நாடே, துக்கத்தைக் கடைப்பிடித்து வரும் வேளையில், புத்தாண்டைக் கொண்டாடுவதற்காக ராகுல் காந்தி வியட்நாம் சென்றுள்ளார்.

மன்மோகன் சிங் மறைவை, ராகுல் காந்தி அரசியலாக்கினார். சீக்கியர்கள் மீது காந்திகளும், காங்கிரஸ் கட்சியினரும் வெறுப்பைக் காட்டி வருகின்றனர். தர்பார் சாஹிப்பை மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி இழிவுபடுத்தினார் என்பதை யாரும் மறக்கவேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிலையில் இதற்கு பதிலடி தரும் விதமாக விருதுநகர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாக்கூர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறும்போது, “ஒரு பிரச்சினைக்கு பதில் கூறாமல் வேறொரு பிரச்சினையை எழுப்பும் இந்த 'டேக் டைவர்ஷன்' அரசியலை பாஜகவினர் எப்போது நிறுத்துவார்கள் என்று தெரியவில்லை? யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங் தகனத்துக்கு இடத்தைத் தர மறுத்த மத்திய அரசின் செயல் வெட்கக்கேடானது. ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் பயணம் செய்தால், அது ஏன் உங்களைத் தொந்தரவு செய்கிறது? புத்தாண்டில் நலம் பெறுங்கள்" என்றார்.

x