புஷ்பா பட கதாநாயகன் அல்லு அர்ஜுனின் ஜாமீன் மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு


ஹைதராபாத்: புஷ்பா திரைப்பட கதாநாயகன் அல்லு அர்ஜுனின் ஜாமீன் மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத் சந்தியா திரையரங்கில் கடந்த 4-ம் தேதி இரவு புஷ்பா-2 திரைப்படத்தின் சிறப்பு காட்சி வெளியிடப்பட்ட போது, நடிகர் அல்லு அர்ஜுன் அப்படத்தை காண வந்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ரேவதி (35) எனும் பெண் சிக்கி உயிரிழந்தார். இவரது 9 வயது மகன் ஸ்ரீதேஜ் என்பவரும் இதில் சிக்கி மயக்கமடைந்தார். இவர் தற்போது ஹைதராபாத் கிம்ஸ் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுன், திரையரங்கு உரிமையாளர், மேலாளர் என மூவரும் கடந்த 13-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இதனை தொடர்ந்து இவர்கள் மூவருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து மேற்கண்ட மூவரும் 14-ம் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இந்நிலையில், நேற்றோடு அவருக்கு வழங்கிய 14 நாள் நீதிமன்ற காவல் முடிவடைந்ததால், அவர் ஹைதராபாத் நாம்பள்ளி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டி இருந்தது. ஆனால், மீண்டும் கூட்ட நெரிசல் ஏற்படுமோ என எழுந்த கேள்வியால், அவர் காணொலி மூலம் ஆஜராக நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி, நடிகர் அல்லு அர்ஜுன் நேற்று காணொலி மூலம் ஆஜரானார். அப்போது அவரின் ஜாமீன் மனுவுக்கு பதில் அளிக்க போலீஸார் கால அவகாசம் கேட்டதால், இவ்வழக்கு விசாரணை வரும் 30-ம் தேதி திங்கட்கிழமைக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இதனிடையே சந்தியா திரையங்கில் நடந்த கூட்ட நெரிசல் குறித்த விசாரணையை வரும் ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக நாம்பள்ளி நீதிமன்றம் அறிவித்துள்ளது.

x