முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. ஏற்கெனவே இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு வெள்ளிக்கிழமை இரவு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
நினைவிழந்து மயக்கமும் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மன்மோகன் சிங் காலமானார்.
இந்தியாவின் பதினான்காவது பிரதமராக பதவி வகித்த மன்மோகன் சிங், ‘நவீன இந்தியாவின் பொருளாதார தந்தை’ என்று போற்றப்படுபவர். கடந்த 1932 செப்டம்பர் 26-ம் தேதி, தற்போது பாகிஸ்தானில் உள்ள மேற்கு பஞ்சாபில் பிறந்தவர்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்ற மன்மோகன் சிங், கேம்பிரிட்ஜ் மற்றும்ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்களில் பொருளாதாரப் படிப்புகள் சார்ந்த பட்டங்கள் பெற்றவர்.
பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகத் தனது பணியை தொடங்கிய அவர், உலகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் பேராசிரியராக இருந்தவர்.
பொருளாதாரத் துறையில் மேதையாக திகழ்ந்த மன்மோகனின் திறமையின் காரணமாகவே அவருக்கு, நாட்டின் மிக முக்கியப் பொறுப்புகள் வழங்கப்பட்டன. ரிசர்வ் வங்கி கவர்னர், தலைமை பொருளாதார ஆலோசகர், திட்டக் குழு துணைத் தலைவர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
1991-ம் ஆண்டு, நாட்டின் பொருளாதார சிக்கலைக் கையாளுவதற்காக மன்மோகன் சிங்கை, மத்திய நிதியமைச்சர் ஆக்கினார், அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ். அப்போது, நாட்டின் நிதி நிலைமையை தனது திட்டங்களால் வெகுவாக மீட்டெடுத்தார் மன்மோகன் சிங்.
இந்தியாவின் பொருளாதார தாராளமயமாக்கல் கொள்கையின் தொடக்கத்துக்கு வித்திட்ட மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் 2004 மே மாதம் முதல் 2014 மே மாதம் வரை என தொடர்ந்து இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தவர்.
நாட்டின் பிரதமராக பொறுப்பேற்ற பின், மன்மோகன் சிங் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை எடுத்தார். இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி விகிதம் ஒன்பது சதவீதத்தை தொட்டது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம் உள்ளிட்ட நல்ல திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
குறிப்பாக, 2008-ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை இந்தியாவில் திறமையுடன் சமாளித்தார் மன்மோகன் சிங்.
அதே ஆண்டில், அமெரிக்காவுடன் இந்தியா அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொள்வதை எதிர்த்து, அரசுக்கு அளித்துவந்த ஆதரவை இடதுசாரிக் கட்சிகள் திரும்பப் பெற்றாலும், நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆட்சி தப்பியது.
இந்தியா - அமெரிக்க இடையிலான அணுசக்தி ஒப்பந்தம் குறித்த நிலைப்பாட்டில் மன்மோகன் சிங் வெளிப்படுத்திய உறுதியை உலக நாடுகள் கண்டு வியந்தன.
நேர்மையான அரசியல் வரலாறு கொண்ட முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மறைவையொட்டி, ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பிரதமர் மோடி தனது இரங்கல் குறிப்பில், ‘இந்தியா தனது தலைசிறந்த தலைவர்களில் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கின் இழப்புக்காக துக்கம் அனுசரிக்கிறது. எளிமையான சூழலில் இருந்து மேலே வந்து, மதிப்பிற்குரிய பொருளாதார நிபுணராக உயர்ந்தார். நிதியமைச்சர் உட்பட பல்வேறு அரசாங்க பதவிகளிலும் பணியாற்றினார்.
பல ஆண்டுகளாக நமது பொருளாதாரக் கொள்கையில் வலுவான முத்திரையை பதித்தார். நாடாளுன்றத்தில் அவரது செயல்பாடுகள் அற்புதமானவையாக இருந்தன. நமது பிரதமராக, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த விரிவான முயற்சிகளை மேற்கொண்டார்.
மன்மோகன் சிங் பிரதமராகவும், நான் குஜராத் முதல்வராகவும் இருந்தபோது நானும் அவரும், தொடர்ந்து உரையாடியிருக்கிறோம். அரசாங்கம் தொடர்பான பல்வேறு விஷயங்களில் நாங்கள் விரிவான விவாதங்களை நடத்துவோம். அவருடைய ஞானமும் பணிவும் எப்பொழுதும் வெளிப்படையானவை” என்று புகழஞ்சலி செலுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி.