டெல்லி தேர்தலுக்காக பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டு சேர்ந்துள்ளது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டியுள்ளது.
டெல்லி முதல்வர் அதிஷி, ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் ஆகியோர் நேற்று டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இண்டியா கூட்டணியின் ஒற்றுமையை காங்கிரஸ் சேதப்படுத்துகிறது. காங்கிரஸ் தலைவர்கள் அஜய் மாக்கன், சந்தீப் தீட்சித் ஆகியோர் பாஜகவை விமர்சிப்பதற்கு பதிலாக ஆம் ஆத்மியை குறி வைக்கின்றனர். அர்விந்த் கேஜ்ரிவாலை தேசவிரோதி என அழைத்து அஜய் மாக்கன் அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டார்.
சந்தீப் தீட்சித், ஃபர்கத் சூரி போன்ற காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜகவின் ஆதரவை பெற்றுள்ளது தெளிவாகிறது. அஜய் மாக்கன் மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்கள் மீது 24 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு எடுக்காவிட்டால் இண்டியா கூட்டணியில் இருந்து காங்கிரஸை வெளியேற்ற வேண்டும் என கூட்டணியின் பிற கட்சிகளுக்கு நாங்கள் அழுத்தம் கொடுப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.