பிஹாரில் மாணவர்கள் போராட்டத்தில் தடியடி: ராகுல் காந்தி கண்டனம்


வினாத்தாள் கசிவு விவகாரத்தில் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதற்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நேற்று கண்டனம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “ ஏகலைவனின் கட்டைவிரல் துண்டிக்கப்பட்டதைப் போலவே வினாத்தாள் கசிவுகளால் வேலைவாய்பை தேடும் இளைஞர்களின் கட்டைவிரல்கள் வெட்டப்படுகின்றன என்று நாடாளுமன்றத்தில் நான் ஏற்கெனவே பேசியிருந்தேன். இதற்கு சமீபத்திய சிறந்த உதாரணம் பிஹார் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (பிபிஎஸ்சி) எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டம்.

வினாத்தாள் கசிவுக்கு எதிராகவும், தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் குரல் எழுப்புகின்றனர். ஆனால், தோல்வியை மூடிமறைக்க தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மாணவர்கள் மீது தடியடி நடத்துகிறது. இது மிகவும் வெட்கக்கேடான செயல் மட்டுமின்றி வன்மையாக கண்டிக்கத்தக்கது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். நீதி கிடைக்க போராடுவோம்" என்று தெரிவித்துள்ளார். இதேபோன்று, காங்கிரஸ் கட்சி எம்பி பிரியங்கா காந்தி வதேராவும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

x