டெல்லியில் ஜூன் 1-ல் இண்டியா கூட்டணி ஆலோசனை


மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து இண்டியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட உள்ளது.

ஆறாம் கட்ட தேர்தல் நாளான கடந்த 25-ம் தேதி காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறும்போது, “கடந்த 5 கட்ட தேர்தலில் சர்வாதிகார சக்திகள் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளன. இதனால் பீதியின் குரல்கள் உச்சத்தில் உள்ளன” என்றார்.

ராகுல் காந்தி கூறும்போது, “வாக்குப்பதிவின் முதல் 5 கட்டங்களில், பொய்கள், வெறுப்பு மற்றும் வெற்று பிரச்சாரத்தை மக்கள் நிராகரித்துள்ளனர். தங்களின் வாழ்க்கை தொடர்பான அடிமட்ட பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளனர்” என்றார்.

இந்நிலையில் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் ஜூன் 1-ம் தேதி இண்டியா கூட்டணியின் கூட்டம் டெல்லியில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் அவரது இல்லத்தில் இக்கூட்டம் நடைபெறுகிறது. பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இக்கூட்டத்தில் இண்டியா கூட்டணியின் முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய வியூகங்கள், செயல்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியும் இண்டியா கூட்டணியில் இடம்பெற்றுள்ளது.

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கேஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம் அவரை ஜூன் 2-ம் தேதி சிறைக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஒருநாள் முன்னதாக இக்கூட்டம் நடைபெறுகிறது.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று கூறும்போது, “ஜூன் 1-ம் தேதி மேற்கு வங்கத்தில் 9 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. மேலும் புயல் நிவாரணப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளது. இதனால் என்னால் கூட்டத்தில் பங்கேற்க இயலாது என கூறிவிட்டேன்” என்றார்.

x